முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கம்யூனிஸ்டுக்கு எதிரி: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஏன்? தேனி தொகுதி பிரச்சாரத்தில் சரத்குமார் சூடான கேள்வி

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

தேனி : கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரியான காங்கிரஸ், தமிழகத்தில் மட்டும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிவைத்தது ஏன்? என்று தேனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, க.விலக்கு, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கோம்பை, சங்கராபுரம், தேவாரம் போடி உள்ளிட்ட பகுதிகளில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது,

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி. தி.மு.க.வினர் விஞ்ஞானத்திலும் ஊழல் செய்பவர்கள் என்பதை 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் நிரூபித்துள்ளார்கள். ஸ்டாலின் எங்கள் மெகா கூட்டணியைப் பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார். அம்மா  2011-ல் கொடுத்த வாக்குறுதிகளை கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நிறைவேற்றி உள்ளார். அம்மா தற்போது இல்லை என்றாலும் மாநிலத்தில் அம்மா ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சிறந்த முறையில் செயல்பட்டு தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி வருகிறார்கள்.

மத்தியில் பெரும்பான்மை உள்ள பா.ஜ.க. அரசு ஆட்சி அமைத்தால் தான் மாநிலத்தில் பல்வேறு சலுகைகள் பெறவும் நிதி பெற்று நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால்தான் இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. எனவே இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. நல்ல சேவை செய்யக்கூடிய கூட்டணி. தனிமனிதனை விமர்சனம் செய்யும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். 1999 முதல் 2004 வரை தி.மு.க. பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்த போது மதவாத கட்சியாக தெரியவில்லையா? தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து 10 ஆண்டுகள் பயணித்து பல்வேறு துறைகளில் ஊழல் செய்ததை மறந்து விட்டார்களா? 2006-ல் ஹெலிகாப்டர் வாங்குவதில் 200 மில்லியன் டாலர் ஊழல். 2008-ல் 2ஜி முறைகேட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல். 2012-ல் நிலக்கரியில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல். காஷ்மீர் பிரச்சினையை கண்டுகொள்ளாதது. 1974-ல் இந்திரா காந்தி இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவில் 285 ஏக்கர் நிலத்தை நிலத்தை பார்லிமென்ட் ஒப்புதல் பெறாமல் கச்சத்தீவை தாரை வார்த்தது. அப்போது எல்லாம் தி.மு.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கொண்டுதான் காங்கிரஸ் செய்யும் ஊழலுக்கு துணை போனது. ஈழத்தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தது. இப்படி சந்தர்ப்பவாத கூட்டணி நடத்தும் தி.மு.க. எங்களைப் பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்வதற்கு அருகதை இல்லை. கம்யூனிஸ்டுடன் கேரளாவில் எதிரியாகும் காங்கிரசார்,  தமிழ்நாட்டில் கூட்டணியாகவும், செயல்படுவதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி. இவ்வாறு சரத்குமார் பேசினார். இப்பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து