முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா முழுவதும் 100 கூட்டங்களில் பிரியங்கா பேச ஏற்பாடுகள் தீவிரம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் பிரியங்கா பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ளார். உத்தர பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பிரியங்காவுக்கு அமோக ஆதரவு கிடைப்பதால் தங்கள் தொகுதிக்கும் பிரியங்கா வந்தால் எளிதான வெற்றியை பெற முடியும் என்று நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து தங்கள் மாநிலத்திற்கு வருமாறு காங்கிரஸ் தலைவர்கள் போட்டி போட்டு பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்தனர்.

பிரியங்கா முதலில் அந்த அழைப்புகளை ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப் போவதாக அவர் கூறியிருந்தார். என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரை விடவில்லை. சமரசம் செய்து மற்ற மாநிலங்களிலும் அவரை பிரசாரம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர். பிரியங்கா இதுவரை உத்தரபிரதேசம் தவிர வேறு மாநிலத்திற்கு சென்று பிரசாரம் செய்யவில்லை. கடந்த 4-ம் தேதி அவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கு ராகுலுடன் சென்று இருந்தார். அப்போது தனக்கு கிடைத்த ஆரவாரமான வரவேற்பை கண்டு பிரியங்கா நெகிழ்ந்து போனார்.

இதையடுத்தே அவர் நாடு முழுவதும் பிரசாரத்திற்கு முழு மனதுடன் சம்மதித்துள்ளார். அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பின் பேரில் எந்தெந்த மாநிலத்திற்கு செல்லலாம் என்ற பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பிரியங்கா இந்தியா முழுவதும் முக்கிய மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி பிரசாரம் செய்வார் என்று தெரிய வந்துள்ளது. குறைந்தபட்சம் 100 பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசம் மாநிலம் தவிர கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களிலும் அதிக கூட்டங்களில் பேச பிரியங்கா முடிவு செய்துள்ளார். இந்த 5 மாநிலங்களிலும் கணிசமான அளவுக்கு தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து