முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவர் மரணத்தில் மர்மம் எதிரொலி: சாதிக் பாட்ஷா மனைவி ஜனாதிபதியிடம் மனு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தனது கணவர் சாதிக்பாட்சா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் அவரது மனைவி ரேஹா பானு மனு அளித்துள்ளார். இத்தகவலை அவரே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சாதிக்பாட்சா மனைவி ரேகாபானு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறி்யதாவது:-

ராசா முதலீடு...

கடந்த 2003ம் ஆண்டு நானும், எனது கணவர் சாதிக் பாட்சாவும் கீரீன்ஹவுஸ் புரோமோட்டர்ஸ் லிமிட்டெட் என்ற கம்பெனியை நடத்தி வந்தோம். ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான இந்த கம்பெனி வெற்றிகரமாக நடந்து வந்தது. அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் எனது கணவர் சாதிக்பாட்சாவும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நன்கு அறிவார்கள். 2006-ம் ஆண்டு எங்களது கம்பெனி வளர்ந்து வந்தபோது ராசா அதில் முதலீடு செய்ய விரும்பினார். எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆர்.பி. பரமேஸ்குமார் அவரது மனைவி பரமேஸ்வரி மற்றும் அவரது சகோதரர் ராமசந்திரன், எங்களது கம்பெனியில் இயக்குனர்களாக முதலீடு செய்தனர்.

தலையீடு...

என்னுடைய கணவர் சாதிக் அவர்களை மிகவும் நம்பினார். ஆனால் ராஜாவின் உறவினர்கள் பங்குதாரர்களான பின்னர் என்னையும் என் கணவரையும் கம்பெனியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரம்கட்டத் தொடங்கினார்கள், கம்பெனி விவகாரங்களிலும் தங்களது தலையீட்டை வெளிப்படுத்தினர். இதன்பின்னர் சாதிக்பாட்சாவின் கம்பெனி ஆவணங்கள் அனைத்தையும் ராஜாவின் உறவினர் பரமேஸ்குமார் எழுதி வாங்கிக்கொண்டதாக தெரிய வந்தது.

மர்ம மரணம்...

இந்த சூழ்நிலையில் 2010-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தொடர்புடைய 2ஜி ஊழல் வெளிவரத் தொடங்கியது. என்னுடைய கணவர் சாதிக்கையும் சி.பி.ஐ. விசாரணை நடத்த முயற்சித்தது. அப்போது ஸ்பெக்டரம் வழக்கில் தொடர்புடைய சாகித்ய பால்வாவுடன் ஸ்டாலினுக்கு இருக்கும் நெருக்கம் குறித்து என்னுடைய கணவர் சாதிக் கூறிவிடுவார் என்ற சந்தேகத்துடன் ராஜாவின் உறவினர் பரமேஸ்குமார் மிரட்டி வந்தார். இந்தநிலையில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி என்னுடைய கணவர் சாதிக் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

சந்தேகங்கள்...

என்னுடைய கணவர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன, சாதிக் மனவலிமையுள்ள மனிதர், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தேன். அப்போது என்னுடைய கணவர் மரணம் குறித்து பேசுவதற்கோ மனவலிமை இல்லாதவளாக இருந்தேன்.

ஜனாதிபதிக்கு...

என்னுடைய கணவர் சாதிக்பாட்சா மரணத்திற்கு பின்னர், கீரின் ஹவுஸ் புரமோட்டர்ஸ் கம்பெனியில் உள்ள பங்குகளை மீட்க ராஜாவின் உறவினர்களுடன் சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறேன். இதற்கிடையில் என்னுடைய தம்பி அசிக் எனக்கு உதவியதால் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு பொய்யான வழக்கு பதிவுசெய்தது. நான் கடைசி வரைபோராடி வருகிறேன். ராஜாவின் உறவினர்கள் என் கணவரின் கீரின்ஹவுஸ், புரமோட்டர்ஸ் பங்குகளை என்னை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக் கொண்டனர். என்னுடைய கணவர் சாதிக் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு சேரவேண்டிய பங்குகளை சட்டப்படி பெற்றுத்தர வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து