டோனியும் மனிதர்தானே: நடுவர்களுடனான சர்ச்சை குறித்து கங்குலி கருத்து

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2019      விளையாட்டு
ganguly comment 2019 04 13

ஜெய்ப்பூர் : நடுவர்களுடன் டோனி வாக்குவாதம் செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, எல்லோரும் மனிதர்கள்தானே என்று கூறியுள்ளார்.

சிறிய குழப்பம்...

ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க, மூன்றாவது பந்தில் டோனி ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்து பேட்டிங் செய்த சண்டனரின் இடுப்புக்கு மேலே சென்றது. அப்போது, முதன்மை நடுவர் நோ பால் கொடுக்க, லெக் திசையில் நின்ற நடுவர் இல்லை என்றார். அதனால் சிறிய குழப்பம் ஏற்பட்டது.

விதிமுறை மீறல்...

இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டோனி, திடீரென மைதானத்திற்குள் சென்று நடுவர்களிடம் விளக்கம் கேட்டார். டோனி இப்படி நடந்து கொண்டது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்ட டோனியாக இப்படி நடந்து கொண்டார் என பலரும் வியந்தனர். இருப்பினும், அணியின் கேப்டன் என்ற முறையில் அவர் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இருப்பினும், விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவருக்கு ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. டோனி நடந்து கொண்ட விதம் பெரிய விவாதமாகவே மாறியது. பலரும் ஆதராக, எதிராக என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சரியாக படவில்லை...

இந்நிலையில், டோனி நடுவர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து கருத்து தெரிவித்த கங்குலி, எல்லோரும் மனிதர்கள்தானே என்று கூறியுள்ளார். ‘அவரது போராட்ட உணர்வு அப்படி நடந்து கொள்ள வைத்துள்ளது. இது மிகவும் முக்கியமானது’ என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதனிடையே, டோனி நடந்து கொண்ட விதம் தனக்கு சரியாக படவில்லை என்று ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டி என்றாலே பரபரப்பு இருக்கத்தான் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து