முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று நடக்கிறது பட்டாபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் சுந்தரேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

இன்று பட்டாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்  இன்று  நடக்கிறது. இதையொட்டி தங்கப் பல்லக்கில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி கீழ சித்திரை வீதி, தெற்கு ஆவண மூல வீதி, திண்டுக்கல் ரோடு வழியாக வலம் வருகிறார்கள். மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி அங்கிருந்து பிற்பகலில் புறப்பாடாகி கோவிலுக்குள் வருவர். பின்னர் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 8 மணிக்கு மேல் விருச்சிக லக்னத்தில் மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. அப்போது அம்மனுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கி சிறப்பு தீபாராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், செங்கோலை அவருடைய பிரதிநிதியாக இருந்து கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் பெற்றுக் கொள்கிறார். இரவு 9 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் செய்து வருகிறார்.

17-ல் திருக்கல்யாணம்

மீனாட்சி திருக்கல்யாணம் நாளை மறுதினம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பக்தர்கள் அமருவதற்கு வசதியாக பிரம்மாண்ட பந்தல் அலங்காரம் நடந்து வருகிறது. திருக்கல்யாணத்தை காண தரிசன கட்டணமாக ரூ. 500, ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சீட்டை இணையதளம் மூலம்  மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும். ரூ. 200 மற்றும் ரூ. 500 முன்பதிவு செய்து குறுஞ்செய்தி வந்தவர்களுக்கு அனுமதி சீட்டு விநியோகம் மேற்கு சித்திரை வீதியில் உள்ள கோவில் பிர்லா விடுதியில் வழங்கப்பட்டு வருகிறது.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து