ஐ.பி.எல். கிரிக்கெட்: மொகாலியில் பெங்களூர் அணிக்கு முதல் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      விளையாட்டு
Bangalore 2019 04 14

Source: provided

மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்து பெங்களூரு அணி முதல் வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. டாஸ் ஜெயித்த பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே கெய்ல் வெளியேறி இருக்க வேண்டியது. அவருக்கு எல்.பி.டபிள்யூ. கேட்ட போது நடுவர் விரலை உயர்த்த மறுத்தார். ஆனால் டி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்தின்படி அப்பீல் செய்திருந்தால் அவர் அவுட் ஆகியிருப்பார். ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது.

இந்த பொன்னான வாய்ப்பை கோலி பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். அதன் பிறகு தனது கைவரிசையை காட்டிய கெய்ல், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரியும், 2 சிக்சரும் விரட்டினார். இதனால் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன் எடுத்தது. ஸ்கோர் 66 ரன்களை எட்டிய போது, லோகேஷ் ராகுல் (18 ரன்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் (15 ரன்) யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் போல்டு ஆனார்.

மொயீன் அலியும், சாஹலும் இணைந்து மிடில் ஓவர்களில் பஞ்சாப் அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த கெய்ல் அதன் பிறகு நிதானமாக ஆடினார். மறுமுனையில் சர்ப்ராஸ்கான் 15 ரன்னிலும், சாம் குர்ரன் ஒரு ரன்னிலும் நடையை கட்டினர். கெய்ல் மட்டும் அசராமல் நிலைத்து நின்று மட்டையை சுழட்டினார். அவர் 83 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை விராட் கோலி கோட்டை விட்டார். சதத்தை நெருங்கிய கெய்லுக்கு அதை எட்டுவதற்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் பவுண்டரி மட்டுமே அடித்ததால், ஐ.பி.எல்.-ல் அவரது 7-வது செஞ்சுரி வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. கெய்ல் 99 ரன்களுடனும் (64 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), மன்தீப்சிங் 18 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 36-வது அரைசதத்தை பூர்த்தி செய்த கேப்டன் விராட் கோலி 67 ரன்களும் (53 பந்து, 8 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்களும் (நாட்-அவுட்) மார்கஸ் ஸ்டோனிஸ் 28 ரன்களும் (நாட்-அவுட்), பார்த்தீவ் பட்டேல் 19 ரன்களும் எடுத்தனர்.

இந்த சீசனில் தனது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருந்த பெங்களூரு அணிக்கு இது முதல் வெற்றியாகும். அதே சமயம் 8-வது லீக்கில் ஆடிய பஞ்சாப் அணிக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும். நடப்பு தொடரில் உள்ளூரில் பஞ்சாப் அணி சந்தித்த முதல் தோல்வியாகவும் இது அமைந்தது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து