முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் தலைவர்களும், வேட்பாளும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளான 18-ம் தேதி பொதுமக்கள் 100 மீட்டர் எல்லைக்குள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே கட்டமாக...

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கின. வேட்பாளர்கள் தேர்வு முடிந்ததும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி முடிந்ததும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

தலைவர்கள் பிரசாரம்

தமிழகத்தில் அ.தி.மு.க. மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது. இவற்றில் பா.ஜ.க. , பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அதே போல தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 இடங்களில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு முடிந்ததும் டெல்லி தலைவர்கள் தமிழகம் வரத் தொடங்கினார்கள். குறி்ப்பாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு 3 முறை வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருப்பூர், கன்னியாகுமரி, கோவை போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்த அவர் பிறகு தேனி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, மதுரை  உள்ளிட்ட இடங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

இதே போல தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதே போல்  துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று ஓய்கிறது பிரசாரம்

நாளை மறுநாள் வாக்குப்பதிவி நடைபெறவுள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவையில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறி, ஆவணங்கள் இல்லாமல் இதுவரை கொண்டு செல்லப்பட்ட 132.91 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருமானவரித்துறை மற்றும் பறக்கும் படைகள் மூலம் 55.02 கோடி பணமும், வருமானவரித்துறை மட்டும் 42.37 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் தொடர்பாகப் பறக்கும் படையினர் எந்த வீடு மற்றும் கட்டிடங்களுக்குள் சென்று சோதனை செய்ய அதிகாரம் கிடையாது. ஆனால் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தும்போது சம்பந்தப்பட்ட வீடு அல்லது கட்டிடத்தின் வெளியே அவர்களுடன் இணைந்து செயல்படலாம். ஆனால் உள்ளே சென்று சோதனை செய்யப் பறக்கும் படைக்கு அதிகாரம் இல்லை.

நம்ப வேண்டாம்...

தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 4466 வழக்குகள் அரசியல் கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையங்களில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. யார் தொகுதி மாறியிருந்தாலும் தற்போது இருக்கும் இடத்தில் புதிய விண்ணப்பத்தை உடனடியாக அளித்து தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்ற தவறான பதிவு சமூக வலைத்தளங்களில் வருவதாக தகவல் வந்தது. இது தவறானது. இதனை யாரும் நம்ப வேண்டாம். வாக்காளர் பட்டியலில் பெயர் எங்கு உள்ளதோ அங்கு மட்டுமே தனது வாக்குகளைபதிவு செய்ய முடியும்.

தபால் வாக்குகள்...

அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. 17 ம் தேதி மாலையிலிருந்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அனுப்பப்படும். அங்கு இருக்கும் அதிகாரிகளை அதனைப் பெற்றுக்கொள்வார்கள். துணை ராணுவத்தினர் அனைவரும் வந்துவிட்டனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. அதற்குப் பிறகு யாரும் எந்த வகையிலும் பிரசாரம் செய்யக்கூடாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு 4,22,239 தபால் வாக்குகள் வழங்கப்பட்டது. இதில் 1.01.473 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்கள் தொடர்ந்து தங்களுடைய வாக்குகளைச் செலுத்துவார்கள்.

செல்போன் பயன்படுத்த....

வாக்குப்பதிவு மையத்தின் 100மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் 18ம் தேதி வாக்குப்பதிவு முடிவு வரை பரப்புரை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து