அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்: மாலி பிரதமர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      உலகம்
Mali PM resigns 2019 04 19

பமாகோ, மாலி நாட்டில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி மோப்டி நகரம் அருகேயுள்ள ஒகோசாகோ கிராமத்தில் நுழைந்த ஆயுதக் குழுவினர், துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் புலானி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 160 பேரை படுகொலை செய்தனர். இந்த படுகொலையை தோகோன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் நிகழ்த்தியிருக்கலாம் என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சம்பவத்தைத் கண்டித்து மாலியில் போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறையை கட்டுப்படுத்த பிரதமர் சூமேலூ பூபேயே மாய்கா தவறியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. ஜனாதிபதியும் தனது தொலைக்காட்சி உரையில், பிரதமர் பெயரை குறிப்பிடாமல் தனது அதிருப்தியை தெரிவித்தார். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியின் எம்பிக்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தனர். இவ்வாறு அனைத்து தரப்பில் இருந்தும் பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், பிரதமர் சூமேலூ பூபேயே மாய்கா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. அமைச்சர்களுடன் சென்று ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கினார். அவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய பிரதமர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய அரசு அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து