பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட பார்வையாளர் இடைநீக்கம் காங். கண்டனம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
helicopters 2018 06 04

Source: provided

புதுடெல்லி : பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்தது. அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் செய்ய சென்றார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியவுடன், ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் பார்வையாளர் முகமது மொசின், அந்த ஹெலிகாப்டரை சோதனையிட்டார்.

இந்த சோதனையால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாகி விட்டது. இந்நிலையில், முகமது மொசினை தேர்தல் கமிஷன் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவில், “கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்கள் தொடர்பாக தேர்தல் கமிஷன் பிறப்பித்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதற்காக கர்நாடக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மொசின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது. 

“கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டது, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது” என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதமரின் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மர்ம பெட்டி இறக்கப்பட்டதாக செய்தி வெளியானநிலையில், எல்லா ஹெலிகாப்டர்களிலும் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்த்தோம். பிரதமரின் ஹெலிகாப்டருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு, கடமையை செய்த தேர்தல் பார்வையாளரை தேர்தல் கமிஷன் இடைநீக்கம் செய்துள்ளது.

இதன்மூலம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதை விரும்பாத அளவுக்கு ஹெலிகாப்டரில் மோடி அப்படி என்ன கொண்டு சென்றார்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து