முழு வாக்குப்பதிவை எட்ட நாட்டின் எந்த பகுதியிலும் வாக்களிக்கும் வசதி வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      தமிழகம்
ramadoss 2018 11 16

Source: provided

சென்னை : முழு வாக்குப்பதிவை எட்ட நாட்டின் எந்த பகுதியிலும் வாக்களிக்கும் வசதி வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 38 தொகுதிகளிலும் சராசரியாக 71.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 38 தொகுதிகளில் தருமபுரி, நாமக்கல், கரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், ஆரணி, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தேனி, விழுப்புரம், சேலம், திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 23 தொகுதிகளில் சராசரிக்கும் கூடுதலாக, அதாவது 71.90%க்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேநேரத்தில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பட்டியலில் தென் சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகிய தொகுதிகள் முன்னணியில் உள்ளன. இவற்றில் தென் சென்னையிலும், மத்திய சென்னையிலும் முறையே 56.34சதவீதம், 58.69 சதவீதம் என்ற அளவில் தான் வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருப்பெரும்புதூர், வட சென்னை ஆகியவை 60 விழுக்காட்டைத் தட்டுத் தடுமாறி கடந்துள்ளன. இவை அனைத்தும் சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள தொகுதிகளாகும். அதேபோல், கோவை (63.00 சதவீதம்), மதுரை (65.83சதவீதம்) ஆகிய மாநகரத் தொகுதிகளிலும், குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பது பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களின் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்தும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் புரட்சியாளர்கள், வெயிலுக்குக் கூட வாக்குச்சாவடி பக்கம் ஒதுங்காதது தான் முரண்பாடுகளின் உச்சம் ஆகும்.

எந்த அரசியல் கட்சியையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால் தான் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி அவர்கள் தப்பித்துக்கொள்ள முயலலாம். ஆனால், அது சரியான பதில் இல்லை என்பதை அவர்களே அறிவார்கள்.

மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி ஆகும். மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை 100சதவீதம் மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்காவிட்டால் அது முழுமையான ஜனநாயகமாக இருக்காது. ஜனநாயகம் நமக்கு அளித்திருக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நாம், இன்னும் கூடுதலான உரிமைகளைக் கோரும் நாம் வாக்குகளை செலுத்துவதற்கு மட்டும் மறுப்பது மிகப்பெரிய கடமை தவறுதலாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொண்டால், தாங்கள் செய்தது மன்னிக்க முடியாத ஜனநாயகக் குற்றம் என்ற உண்மை அவர்களுக்கு புரியும். அது அவர்களை மாற்ற வேண்டும்.

வாக்களிக்கத் தவறுவது குற்றம் என்ற சட்டம் 1777ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் நடைமுறைக்கு வந்து விட்டது. உலகில் 11 ஜனநாயக நாடுகள் உட்பட மொத்தம் 38 நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அல்லது இருந்திருக்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாக்களிக்கத் தவறுவது குற்றமாக கருதப்பட்டு, பல வகைகளில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்ற குரல்கள் எழுகின்றன.

அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் வாக்களிக்கலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இம்மாற்றங்களை எளிதாக செய்ய முடியும்.

இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்த பொது விவாதத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதை சுமையாக கருதாமல் கவுரவமாக நினைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த நாள் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் நாளாக அமையும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து