முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐ.பி.எல். வீரர்கள்!

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக, வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதால் ஐ.பி.எல். தொடரில், சில அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்பு...

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இண்டியன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளில், வெளிநாட்டு அதிரடி வீரர்கள் பங்கேற் றுள்ளனர். அவர்கள்தான் அணிகளை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

பட்டியல் ஒப்படைப்பு...

சிஎஸ்கே அணியில், வாட்சன், இம்ரான் தாஹிர், பிராவோ, டுபிளிசிஸ், பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஸ்டோயினிஸ், ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், ரஷித் கான், ராஜஸ்தான் அணியில் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் உட்பட ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை, அந்தந்த நாடுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அளித்துள்ளது.

இங்கிலாந்து...

இதையடுத்து சம்பந்தப்பட்ட நாடுகள் உலகக் கோப்பைப் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பிக்க இருக்கின்றன. இதனால் ஐ.பி.எல். தொடர் முடியும் முன்பே, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப உள்ளனர்.  வரும் 26 ஆம் தேதிக்குள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள், திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதனால் அவர்கள் சென்றுவிட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், மே 2 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்கள் விரைவில் திரும்புகின்றனர்.

டேவிட் வார்னர்...

ஐதராபாத் அணியின் தூணாக இருக்கும் டேவிட் வார்னரும் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவும் இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக மார்டின் குப்தில் இருக்கிறார். ஏற்கனவே கனே வில்லியம்சன் ரன் எடுக்கத் தவித்து வரும் நிலையில், வார்னரும் பேர்ஸ்டோவும் இல்லாதது அந்த அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.

பென் ஸ்டோக்ஸ்...

பெங்களூரு அணியில், மொயின் அலி (10 போட்டிகளில் 8 விக்கெட், 216 ரன்), ஸ்டோயினிஸ், ஸ்டெயின், டிம் சவுதி ஆகியோர் அணியில் இருந்து விலக உள்ளனர். இதனால் அந்த அணி இன்னும் போராட வேண்டியிருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கிறது. அந்த அணியின் ஜாஸ் பட்லர் ஏற்கனவே இங்கிலாந்து சென்றுவிட்டார். பென் ஸ்டோக்ஸ் செல்ல இருக்கிறார். ஸ்மித் இன்னும் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார்.

ஆன்ட்ரூ ரஸல்...

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, பஞ்சாப், டெல்லி அணிகள், வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றாலும் அதிகம் பாதிப்பைச் சந்திக்காது. சென்னை அணியில் டுபிளிசிஸ், இம்ரான் தாஹிர், டெல்லி அணியில் ரபாடா, மும்பை அணியில் டி காக் ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு செல்ல இருக்கின்றனர். கொல்கத்தா அணியின் தூணாக இருக்கும் ரஸல் இல்லாததது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நியூசி. அறிவிப்பு...

சென்னை அணியில் இருக்கும் மற்ற வீரர்களான வாட்சன், பிராவோ ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்களால் பிரச்னை இல்லை. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்களை ஐ.பி.எல். முடிந்த பிறகு வந்தால் போதும் என்று அறிவித்துள்ளது. அவர்களும், உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து விளையாடுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து