முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

 தேனி,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் எதிர்வரும் 07.05.2019 முதல் 14.05.2019 வரை (தேரோட்டம் 10.05.2019 அன்று) சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது. திருவிழாவின் போது தற்காலிக கடைகளை முறைப்படுத்தி அமைத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கடைகளை அமைத்திட வேண்டும். தற்காலிக உணவு தயாரிப்பவர்களுக்கு  உணவு பாதுகாப்பு அலுவலர்; மூலம் தற்காலிகச்சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
தற்காலிக கடைகள் அனைத்தும் தீ பற்றாத வகையில் அமைக்கப்பட வேண்டும். உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற கடைகளில் அடுப்புகள் பயன்படுத்தக் கூடாது. அனைத்து தற்காலிக கடைகளிலும்  வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் அனைத்தும் மின் ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கோயிலில் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்படுவதை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தினந்தோறும் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தனியார் மண்டபம் மற்றும் பகுதிகளில் உணவு தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை முறையாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் அறிவிப்பு பலகைகள் வைத்திட வேண்டும். பக்தர்கள்; மண்டபங்கள் அல்லது தகரத்தினால் அமைக்கப்பட்ட இடங்களில் மட்டும் விருந்து வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
 தேரின் எடைக்கு தகுந்தவாறு மின்சாரம் பாயாத பொருட்களைக் கொண்டு தேரின் வடம் தயார் செய்திடவும், தேரோடும் சாலைகளை மேடுபள்ளமின்றி தேரின் எடையைத்தாங்கும் வண்ணம் அமைத்திட வேண்டும். பக்தர்கள் ஆற்றில் குளிக்கும் இடம் முதல் அவர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் அதிகமான ஆண், பெண் காவலர்களையும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களையும் பணியில் ஈடுபடுத்திட வேண்டும். காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து 25 நிலையான மற்றும் கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணி;கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
மேலும், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாத வண்ணம் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்திட வேண்டும். தேவையான இடங்களில் பக்த்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகளை வைத்திடவும், ஒலி பெருக்கியின் மூலம் பக்த்தர்களுக்கு தேவையான அறிவிப்புகளை வழங்கிட வேண்டும். தீயணைப்புத்துறையினர் விழா காலங்களின் போது போதுமான அளவு தீயணைப்பு வாகனங்கள், தீத்தடுப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

 சுகாதாரத்துறையினர் கோயில் வளாகத்தில் இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் 24 மணிநேரமும் நிறுத்தி வைத்து தேவையான மருத்துவ வசதிகள் மருத்துவக்குழுவினரைக் கொண்டு 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கிடவும், ஒரு நகரும் மருத்துவ வாகனத்தின் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மனை தரிசிக்க ஏதுவாக தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கான 7 கிளைகளிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கிட வேண்டும். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்படவும், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகமான அளவு மின் விளக்குகளை அமைத்திடவும், தற்காலிக கழிவறைகள் தேவையான அளவு ஆங்காங்கே அமைத்திடும் பணி;கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பக்தர்கள் தீச்சட்டிகள் இறக்கும் இடத்தில் குவியல் ஏற்படாமல் இருப்பதற்காக ஊராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் ஜே.சி.பி இயந்திரத்தினை பயன்படுத்தி உடனுக்குடன் அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்திடவும்;, சரக்கு வாகனம், லாரி போன்றவற்றை மாற்றுப்பாதையில் செல்லுவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்திடவும், கோயில் திருவிழாவில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உணவு வழங்கிடவும், போதுமான இடைவெளியில் ராட்டினங்கள் அமைத்திடவும், ராட்டினங்களை இயக்கிட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, தீதடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்த சான்றிதழ் வழங்கிய பின்னரே ராட்டினங்களை இயக்கிட அனுமதி வழங்கிடவும், ராட்டினம் பயன்படுத்தும் சுமார் 50 நபர்கள் அளவில் விபத்து காப்பீடு செய்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ், தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.சக்திவேல், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.வரதராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் இ.கார்த்திகாயினி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுருளிராஜா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் கா.தென்னரசு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலட்சுமி, வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.குணாளன், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து