முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியை காப்பாற்றிய போலீசார்

வெள்ளிக்கிழமை, 3 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -  பழனியில் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியை போலீசார் உரிய நேரத்தில் மீட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத்(31). இவரது மனைவி அஸ்வினி(27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஸ்ரீநாத் கன்ஸ்ட்ரக்சன்ஸ் வேலை பார்த்து வந்தார். தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் தனது மனைவியிடம் அடிக்கடி நாம் தற்கொலை செய்து கொள்வோமா? என்று கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மனைவி, குழந்தையுடன் ஸ்ரீநாத் பழனிக்கு வந்தார். அடிவாரம் பகுதியில் உள்ள சரவணா லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். பின்னர் தனது குழந்தைக்கு மொட்டை அடித்து விட்டு பழனி முருகனை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் மீண்டும் அறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சிஅடைந்த அஸ்வினி இதுகுறித்து கொல்லத்தில் உள்ள தனது உறவினர்களிடம் செல்போனில் கூறினார். இனிமேல் நாங்கள் ஊருக்கு வர மாட்டோம். தற்கொலை செய்யப் போகிறோம் என்று கூறி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சிஅடைந்து அஸ்வினியின் உறவினர்கள் கொல்லம் எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர். அவர் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் தகவல் தெரிவித்து அவர்களை எப்படியாவது காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
மாவட்டஎஸ்.பி. சக்திவேல் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி.விவேகானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கேரள தம்பதியின் புகைப்படத்தை பழனியில் அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பி அவர்கள் எங்கே தங்கியுள்ளனர் என விசாரித்தனர். இதனையடுத்து அடிவாரம் பகுதியில் தங்கியிருந்ததை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
ஸ்ரீநாத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்ய தயாராக இருந்த நிலையில் போலீசார் அவர்கள் அறைக்கு சென்று வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி தற்கொலைக்கான முடிவைக் கைவிடுமாறு அறிவுரை கூறி ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ஸ்ரீநாத்தின் உறவினர்களை வரவழைத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். சினிமா சம்பவம் போல் தற்கொலைக்கு முயன்ற தம்பதியை காப்பாற்றிய போலீசாரை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து