முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். - குவாலிபையர் 2-வது ஆட்டம்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை அணி? டெல்லி அணியுடன் இன்று மோதல்

வியாழக்கிழமை, 9 மே 2019      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

சென்னை தோல்வி...

ஐ.பி.எல். போட்டியின் பிளேஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து தகுதி பெற்றன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து ‘லீக்‘ முடிவில் வெளியேற்றப்பட்டன.‘பிளேஆப்’ சுற்று கடந்த 3 தினங்களுக்கு முன் தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலியர்-1’ ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐதராபாத் வெளியேற்றம்

நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து ‘குவாலிபையர்-2’ போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது. ‘குவாலிபையர்2’ ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மும்பை இந்தியன்சுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். இதனால் இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

8-வது முறை...

3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. டெல்லியை 2 முறை ‘லீக்‘ ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். பெரோசாகோட்லாவில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 80 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி கடந்த சில போட்டியில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. 7 போட்டியில் 5-ல் தோற்றது பரிதாபமே. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பையிடம் மிகவும் மோசமாக தோற்றது சி.எஸ்.கே. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

கேப்டன் டோனி...

இதற்கு அணியின் மோசமான பேட்டிங்தான் காரணம். பந்து வீச்சு நல்ல நிலையில் இருந்தாலும் பேட்டிங் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இன்றைய முக்கியமான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடுவது அவசியம். கேப்டன் டோனி ஒருவர் மட்டும் நிலையாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் 10 இன்னிங்சில் 405 ரன் குவித்துள்ளார். 7 முறை அவுட் ஆகாததால் அவரது சராசரி 135.00 ஆகும். அதிகப்பட்சமாக 84 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 138.69 ஆகும். 21 பவுண்டரியும், 23 சிக்சர்களும் அடித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சுதான்...

டோனிக்கு அடுத்தபடியாக ரெய்னா 364 ரன்னும், டுபெலிசிஸ் 320 ரன்னும், அம்பதி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர். வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே அதிரடியாக விளையாடினார். ஆனாலும் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார். சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் (23 விக்கெட்), ஹர்பஜன்சிங் (14), ஜடேஜா (13) ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் சேர்ந்து 50 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

ஹர்பஜன்சிங்...

சேப்பாக்கம் ஆடுகளத்தில் தான் டோனி 3 சுழற்பந்து வீரரை பயன்படுத்துவார். விசாகப்பட்டினம் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு வீரர்களை முடிவு செய்வார். ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீரர் ஒருவர் இடம் பெறலாம். ‌ஷர்துல் தாகூர் அல்லது வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் நல்ல நிலையில் உள்ளார். அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டெல்லி அணி ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடி இருப்பதால் ஆடுகளத்தை நன்றாக கணித்து இருக்கும். இதனால் சென்னை சூப்பர் கிங்சுக்கு அந்த அணியை வீழ்த்துவது சவாலானதே.

ரிஷப் - பிரித்விஷா...

டெல்லி அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது. தவான் (503 ரன்), ஷிரேயாஸ் அய்யர் (450), ரி‌ஷப் பந்த் (450), பிரித்விஷா (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இது தவிர இங்ராம், ருதர்போர்டு, கீமோபவுல் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். பந்து வீச்சில் 25 விக்கெட் வீர்த்திய ரபடா இல்லாதது பாதிப்பே. இதை சரி செய்யும் வகையில் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் சர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10) ஆகியோர் உள்ளனர்.சென்னை சூப்பர் கிங்சுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது.

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ‘குவாலிபையர்2’ ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து