முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே டம்மி ஏ.கே.47 ரகம் உள்ளிட்ட பல துப்பாக்கிகள் ,பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தவர் கைது

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      தேனி
Image Unavailable

போடி, -  போடி அருகே, டம்மி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் நிர்வாகியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
     போடி தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட பொட்டல்களம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போடி மீ.விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாகனத்தில் வந்த பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி மகன் கௌர் மோகன்தாஸ் என்பவரது வாகனத்தை சோதனை செய்தனர்.
     இதில் அவரது வாகனத்தில் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டை போலீஸார் சோதனை செய்தபோது ஒரு டம்மி ஏ.கே. 47 ரக துப்பாக்கி, ஒரு டம்மி ஸ்டென் கன் துப்பாக்கி, டம்மி நாட்டு துப்பாக்கு ஒன்று, இரண்டு ஏர் பிஸ்டல்கள், அரிவாள்கள், வீச்சரிவாள்கள், செல்போன்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிந்தது.
     மேலும் கௌர் மோகன்தாஸ் உடன் இருந்த சிலர் போலீஸாரை கண்டதும் தப்பி விட்டனர். விசாரணையில் 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து டம்மி துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது தெரிந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், சார்பு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல், கூட்டுக் கொள்ளை முயற்சியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கௌர் மோகன்தாஸை கைது செய்தனர்.
     மேலும் அவருடன் இருந்த நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி போடி மெட்டு மலை கிராமத்தில் சரவணன் மற்றும் ஜான் பீட்டர் என்ற இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எஸ்டேட் மணி என்பவருக்கும் தொடர்பு உள்ளது. எஸ்டேட் மணி என்பவர் பல்வேறு ஊர்களில் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவரும் மேற்படி கௌர் மோகன்தாசுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவரும் தற்போது நடந்த சம்பவத்தில் உடன் இருந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     இதுகுறித்து போடி டி.எஸ்.பி. தி.ஈஸ்வரன் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கௌர் மோகன்தாஸ், ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்தவர். தற்போது அவர் அந்த கட்சியில் இல்லை. மேலும் இவர் மீது போடி, கொடைக்கானல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி வழக்கும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து