ஐ.பி.எல்.- 150 விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்

சனிக்கிழமை, 11 மே 2019      விளையாட்டு
Harbhajan Singh 11 05 2019

Source: provided

ஐ.பி.எல். போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.

இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து  முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
____________

நடுவர் மீது நடவடிக்கை இல்லை: பி.சி.சி.ஐ

இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.
____________

பயிற்சி ஆட்டத்தில் கலக்கிய ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்கள். ஐ.பி.எல். தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர். தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், நேற்றைய  3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், நேற்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால்  Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
____________

ரிஷ்ப்க்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுக்கும் டோனி மகள்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 12வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் சென்னை அணி, கேப்டன் டோனியின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் மைதானத்தில் டோனியும், ரிஷப் பண்ட்க்கும் நீண்ட பேசிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக ஐ.பி.எல். நிர்வகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், டோனி ரிஷப் பண்ட்க்கு ஆலோசனை சொல்வது போல் இருந்தது. அதனை ரிஷப்பும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டிற்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது.
இதனிடையே, ரிஷப் பண்ட்க்கு டோனியின் மகள் தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், டோனியின் மகள் ஜிவா அழகான கொஞ்சும் மழலை மொழியில் ‘அ..ஆ.. இ..ஈ’ என ரிஷப் பண்ட்க்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குழந்தை ஜிவா தமிழில் சில சொற்களை பேசும் வீடியோக்கள் இந்த ஐ.பி.எல். தொடரில் அவ்வவ்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
____________

வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்: வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்

12 வது ஐ.பி.எல். போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முதல் அணியாக மும்பை அணி தேர்வாகியுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதியது.  அப்போது 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிப் பெற்றது. இதில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டிக்கு பின்பு ஹர்பஜன் பதிவிட்ட ட்வீட், அதில், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK” எனத் தெரிவித்துள்ளார்.
__________________

ரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 38(25) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.  ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. அதனை அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கட்டிவிட்டார்.

ரிஷப்க்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல். நிர்வாகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் ஒரு ஜென் டில்மேன் கேம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
____________

கிரிக்கெட் ரசிகர்கள்மீது தடியடி

புதுச்சேரியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அகன்ற திரையில் பார்ப்பதற்கு ஏராளமானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருவடிக்குப்பத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் போட்டியைக் காண்பதற்காக பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
_____________

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து