முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றியை தடுக்க தி.மு.க. - அ.ம.மு.க. ரகசிய உடன்படிக்கை: ஓட்டப்பிடாரம் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      அரசியல்
Image Unavailable

தூத்துக்குடி, அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை தடுக்க தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாகவும், அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து வசைபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது இந்த தேர்தலில் எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கியவர் மறைந்த முதல்வர் அம்மா. அம்மாவின் கனவை இந்த அரசு நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. அ.தி.மு.க. அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்களை மராமத்து செய்துள்ளது. இதுவரை 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டத்துக்காக ரூ. ஆயிரம் கோடி இந்த அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளின் நலன் காத்த அரசு. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு செய்து கொடுத்துள்ளது. அவர்களுக்கு சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக 25 சதவீத மானியம் அரசால் வழங்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வழிவகை செய்து ஆணை பிறப்பித்த அரசு இந்த அ.தி.மு.க. அரசு. ஆகவே இந்த தேர்தலில் நமது வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பேசிய அவர், அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை தடுப்பதற்காகவே தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக குறிப்பிட்டார். பேராசை கொண்ட ஒரு மனிதரால்தான் இந்த இடைத்தேர்தலே வந்தது என்று தினகரனை அவர் மறைமுகமாக குற்றம் சாட்டினார். எனவே இந்த இயக்கம் மக்கள் இயக்கம். இந்த அரசு மக்கள் அரசு. அதை காக்க வேண்டியது மக்களின் கடமை என்றும் முதல்வர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து