ஜெயலலிதாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர்: 'ஆள்கடத்தல் பேர்வழி' என ஸ்டாலினால் குற்றம்சாட்டப்பட்டவர் செந்தில் பாலாஜி - அரவக்குறிச்சி பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு

திங்கட்கிழமை, 13 மே 2019      தமிழகம்
cm edapadi speech 2019 05 13

அரவக்குறிச்சி : ஜெயலலிதாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் என்றும், 'ஆள்கடத்தல் பேர்வழி' என ஸ்டாலினால் குற்றம்சாட்டப்பட்டவர் செந்தில் பாலாஜி என்றும் அரவக்குறிச்சி பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி கடுமையாக தாக்கி பேசினார். மேலும், செந்தில் பாலாஜி மீது 200 கோடி ஊழல் புகார் சொன்னவர், இன்று அரவக்குறிச்சியில் அவருக்கு ஆதரவாக வீதிவீதியாக புகழ்ந்து பேசி ஓட்டுக்கேட்கிறார் என்று மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேஞ்சமான்கூடலூர், குறும்பப்பட்டி, எனகனூர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளார் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி நேற்று பொது மக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது:-

3 கட்சிக்கு மாறியவர்...

ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு உதய சூரியன் சின்னத்தில் தற்போது போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் தி.மு.க. வேட்பாளர். செந்தில் பாலாஜி. கடந்த முறை நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலின் போது, ஜெயலலிதா ஆணைக்கிணங்க அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். எனது தலைமையில் மற்ற மூத்த அமைச்சர்கள் பலரும் இத்தொகுதியில் முகாமிட்டு இரவு பகல் பாராமல் உழைத்ததன் பேரில் அவர் சட்டமன்ற உறுப்பினரானார். ஏறத்தாழ 15,000க்கும் மேற்பட்டஅ.தி.மு.க.வினர் தங்களது சொந்த வேலைகளை விட்டு விட்டு இவரது வெற்றிக்காக கடுமையாக தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால், இன்றோ அவர்களது உழைப்புக்கு தூரோகம் செய்து விட்டு தி.மு.க.வில் சேர்ந்து கொண்டார்.

நன்றி தெரிவிக்காதவர்....

தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்கி அரசியலில் ஒரு அடையாளம் தந்த அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ய எண்ணும் செந்தில் பாலாஜியா, சாதாரண மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார் ? கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து, நன்றி கூட தெரிவிக்காதவர் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆசியோடு போட்டியிடுவதாக கூறுகிறார்.

உள்ளடி வேலையில்...

தற்போது அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வி.வி.செந்தில்நாதன் கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். இவரை தோல்வியடைச் செய்ததில் பெரும் பங்காற்றியவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. செந்தில்நாதன் வெற்றி பெற்றால் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதை கருத்தில் கொண்டு உள்ளடி வேலையில் செயல்பட்டவர்தான் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க. வேட்பாளராக தற்போது போட்டியிடும் வி.வி.செந்தில்நாதன் தான் தோல்வியுற்ற போதும், தொகுதி முழுவதும் சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பண்பாளர்.

ஊழல் குற்றச்சாட்டு...

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போதெல்லாம், தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஊர் ஊராக சென்று புகழ்ந்து பேசி வருகிறார். இதே ஸ்டாலின் 2.4.2013 அன்று சட்டமன்றப் பேரவையிலே ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். அப்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திலே ஸ்டாலின் குறிப்பிடும் போது "டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் போக்குவரத்துத்துறையிலே ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது என செய்தி வந்துள்ளது" எனப் பேசி, செந்தில் பாலாஜி பற்றி கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

ஆள் கடத்தல் பேர்வழி...

இவ்வாறு ஸ்டாலின் பேசும் போது சட்டமன்ற பேரவையிலே வாக்குவாதம் ஏற்பட்டு தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது. வெளிநடப்பு செய்த ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கிறார். அப்போது ஆள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, என் தகுதி பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என பேட்டியளிக்கிறார். இது குறித்து தி.மு.கவின் கட்சி பத்திரிகையான முரசொலி பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. அதனால் தான் இங்கு இது குறித்து பேசுகிறேன். ஆள்கடத்தில் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஸ்டாலினால் ஆள்கடத்தல் பேர் வழி என குறிப்பிடப்பட்ட அதே செந்தில் பாலாஜிக்கு தான், ஸ்டாலின் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு தந்து, அவர் நல்லவர், வல்லவர், திறமையானவர் என பிரச்சாரம் செய்து வருகிறார். ஓட்டுப்போட்ட மக்களுக்கே துரோகம் இழைத்தவர் செந்தில் பாலாஜி.

நிலம் இருக்கிறதா?

இந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு மூன்று செண்ட் நிலம் தருவேன் என கூறுகிறார். இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறிய கருணாநிதியாலேயே நிலம் வழங்க இயலவில்லை. 25,000 குடும்பத்திற்கு 3 செண்ட் நிலம் தருவதாக இவர் வாக்குறுதி தந்துள்ளார். அப்படியானால் 850 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்தப் பகுதியில் அந்த அளவுக்கு தேவையான நிலம் இருக்கிறதா? இவரால் எப்படி வழங்க இயலும். இதெல்லாம் ஏமாற்று வேலை. இவர் சொந்தமாக நிலம் வழங்க வேண்டும் என்றால் அவ்வளவு பணம் இவருக்கு எங்கிருந்து வந்தது. இது போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை திசை திருப்பி, வாக்குகளைப் பெற முயற்சி செய்கிறார்.

எண்ணிப்பார்க்க...

இது அரசியல் நாடகம். எனவே, வாக்காளப் பெருமக்கள் நன்கு சிந்தித்து அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். செந்தில் பாலாஜி தி.மு.கவில் இணைந்து 4 மாதங்களில் மாவட்ட பொறுப்பு வழங்கி தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று சொன்னால், அந்த கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நிறைவேற்ற முடியாது...

வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு அம்மாவின் அரசு வீட்டுமனைப்பட்டா வழங்கிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் என்ற முறையில் நான் அறிவிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ஆனால் ஸ்டாலின் எதிர் கட்சி தலைவர். அவர் அளிக்கின்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிராம சபை என்ற பெயரில் ஊராட்சி பகுதிகளுக்கு சென்று திண்ணையிலே அமர்ந்து கொண்டு பொது மக்களைச் சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்கிறார். இவர் அந்த குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யப்போகிறார்.

குறைகளை கேட்டாரா?

2006 முதல் 2011 வரை இவர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்தார். அப்போதெல்லாம் கிராமப் பகுதிக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஏதாவது, குறைகளை கேட்டாரா என்றால் நிச்சயமாக இல்லை. இவர் தற்போது நடத்தும் அரசியல் நாடகம் தான் இது என்பதை வாக்காளப் பெருமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யார் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள், யார் பண்பாளர்கள் என்பதை எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டுக்குடிநீர் திட்டம்...

விவசாயப் பெருமக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடி செலவில் நிறைவேற்றிட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதே போன்று காவிரி கோதாவரி இணைப்புத்திட்டம் ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். அரவக்குறிச்சி பரமத்தி பகுதியில் ரூ.250 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்த அம்மாவுடைய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

குளிர்பதன சேமிப்பு...

கரூரில் ரூ.295 கோடியில் மருத்துவக் கல்லூரியில் கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. குடகனார் ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் தடுப்பணை கட்டப்படும். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.102 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்தப்பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளி ஆக்க வேண்டும் என கோரிக்கை வரப்பெற்றுள்ளது. நிச்சயமாக மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தரப்படும். அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை சாகுபடி மிக அதிகமாக செய்யப்படுகிறது. விலை குறைவான காலங்களில் முருங்கைக்காயை பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைத்து தரப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளிகள், அவருக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரட்டை இலைக்கு...

எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதன் நல்ல பண்பாளர், எளிமையானவர், எந்த நேரமும் மக்களைச் சந்திக்கக் கூடியவர். இந்தத் தொகுதி மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். அவருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து