முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம்- ராகுல் காந்தி பேட்டி

சனிக்கிழமை, 18 மே 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.  

பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந் தேதி(வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கூட்டணியில் இல்லாத கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மோடியைப் போல அல்லாமல் எங்கள் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது பற்றி இப்போது பதில் கூற விரும்பவில்லை.

தேர்தலில் மக்கள் என்ன முடிவு அளிப்பார்கள் என்பதை நான் முன்னதாகவே கணித்துக் கூறவும் விரும்பவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் எனபதை மக்களே முடிவு செய்யட்டும். அவர்கள் யாரை தேர்வு செய்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ந் தேதி துல்லியமாக தெரிந்து விடும்.

மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக இருக்கும்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சிதலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அவர்களின் கருத்துகள் எங்களுடன் ஒத்துப் போகிறது. எனவே மதசார்பற்ற கட்சிகள் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

பிரதமர் மோடி தனது தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளில் 90 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்து விட்டது.

தேர்தல் பிரசாரத்தில் எதிர் கட்சிகள் மீது தொடர்ந்து அவதூறு பேசியதன் மூலம் மீதமுள்ள 10 சதவீத வாய்ப்புகளை மோடியே முறியடித்து விட்டார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த வருமாறு நான் விடுத்த அழைப்பை மோடி ஏற்கவில்லை. 5 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த அவர், இதுவரை ஒரு முறை கூட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை.

ஆனால் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு திடீரென பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதிலும் கூட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பதை அவர் தவிர்த்து விட்டார்.

பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் என்ன தான் தத்துவங்களை பேசினாலும், அவை காந்தியின் தத்துவமாகி விடாது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த தேர்தலில் முறையாக இல்லை. பிரதமர் மோடியின் பிரசார அட்டவணையின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் முன்னதாக பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்று கூறி தேர்தல் பிரசாரத்தை முன்னதாக முடிக்க நினைத்தால் அதனை உடனடியாக அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்கத்தில் மோடியின் பிரசாரத்துக்கு பிறகு தான் ஒட்டு மொத்த பிரசாரத்தையும் நிறுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதை எவ்வாறு ஏற்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து