திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 18 மே 2019      தமிழகம்
Thiruparankundram-Constituency 2019 04 20

மதுரை : திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒப்புகை சீட்டு கருவிகளும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல்...

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறும். (இதே போல் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் அன்றைய தினமே எண்ணப்படுகின்றன.)

தீவிர பிரசாரம்...

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ். முனியாண்டியும், சூலூரில் கந்தசாமியும், ஓட்டப்பிடாரத்தில் பெ. மோகனும், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி முதல் கட்ட பிரச்சாரத்தையும், அதை தொடர்ந்து 11-ம் தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.  அப்போது அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு சில இடங்களில் நடந்தே சென்று நெசவாளர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பிறகு  ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர்  தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

முதல்வர் - துணை முதல்வர்...

இதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்களும் அந்தந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர்கள் சரத்குமார், கார்த்திக், நடிகை விந்தியா ஆகியோரும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் செய்தனர்.

அமைச்சர்கள்...

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், திப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியும் பொதுமக்களிடம் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

மின்னல் வேக பிரச்சாரம்...

திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா,  எஸ்.டி.கே. ஜக்கையன், கே. பழனி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். இப்படியாக இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வந்தனர்.

பலத்த பாதுகாப்பு...

இதே போல தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். பல இடங்களில் அவர் திண்ணை பிரச்சாரமும் மேற்கொண்டார்.  அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக இந்த 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் வெளியூர் ஆட்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் நேற்று பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து