பாராளுமன்ற இறுதிக்கட்டதேர்தலில் 60.21 சதவீத வாக்குகள் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
parliament election 2019 05 19

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 60.21 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 73.05 வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி 96 தொகுதிகளுக்கும், 3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 115 தொகுதிகளுக்கும், 4-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி 71 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தலும், 12-ம் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 8 மாநிலங்களில் தீவிரமாக நடந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.  7-வது கட்ட தேர்தலில் பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் இருக்கும் 59 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

7-வது கட்ட வாக்குப்பதிவு நடந்த 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 சதவீதம் பேர் மீது அதாவது 170 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளன. 12 பேர் மீது கொலை வழக்கும், 34 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. 20 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. 7-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 சதவீதம் பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த வாக்குப்பதிவில் 3 மணி நேர நிலவரப்படி பீகாரில் 46.66 சதவீதம், இமாச்சல் பிரதேசம் 49.43 சதவீதம், மத்திய பிரதேசம் 57.27 சதவீதம், பஞ்சாப் 48.18 சதவீதம், உத்தரபிரதேசம் 46.07 சதவீதம்,  மேற்கு வங்கம் 63.58 சதவீதம், ஜார்கண்ட் 64.81 சதவீதம் மற்றும் சண்டிகரில் 50.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இறுதியாக 7-ம் கட்ட வாக்குப்பதிவில் 60.21 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. பீகாரில் 49.92 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 66.18 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 69.38 சதவீதமும், பஞ்சாப்பில் 58.81 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 54.37 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 73.05 சதவீதமும், ஜார்க்கண்டில் 70.5 சதவீதமும், சண்டிகாரில் 63.57 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 73.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும்  23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து