மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
Modi BJP 2019 03 29

புதுடெல்லி, பாராளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலும் ஒருவழியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதாவே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. இது பாரதீய ஜனதாவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் கட்ட தேர்தல் துவங்கியது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் உட்பட  சில மாநிலங்களில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இப்படியாக படிப்படியாக நடைபெற்று வந்த தேர்தலில் நேற்று 7-ம் கட்ட அதாவது இறுதிக்கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த 59 தொகுதிகளில் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களை தவிர மற்றபடி தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். தமிழகத்திற்கும் அவர் மூன்று முறைக்கும் மேல் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வலிமையான பிரதமர் இந்த நாட்டுக்கு தேவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்தன. தேர்தலின் போது தனி நபர் தாக்குதலும் அதிகம் இடம்பெற்றது. இப்படியாக பரபரப்பாக நடந்த தேர்தல் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

 • இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
 • டைம்ஸ் நவ் டி.வி.
 • டைம்ஸ் நவ் டி.வி. வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி கட்சிகள் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் இடங்கள் வருமாறு:-
 • பா.ஜ.க. கூட்டணி  -- 306 இடங்கள்
 • காங். கூட்டணி -- 132 இடங்கள்
 • மற்றவை --- 104 இடங்கள்
 • ரிபப்ளிக் டி.வி.
 • பா.ஜ.க. கூட்டணி -- 287 இடங்கள்
 • காங். கூட்டணி -- 128 இடங்கள்
 • மற்றவை -- 127 இடங்கள்
 • சிவோட்டர்
 • பா.ஜ.க. கூட்டணி -- 287 இடங்கள்
 • காங். கூட்டணி --- 128 இடங்கள்
 • மற்றவை -- 127 இடங்கள்
 • என்.டி.டி.வி.
 • பா.ஜ.க. கூட்டணி -- 300 இடங்கள்
 • காங். கூட்டணி -- 127  இடங்கள்
 • மற்றவை -- 115 இடங்கள்
 • நியூஸ் எக்ஸ்
 • பா.ஜ.க. கூட்டணி -- 242 இடங்கள்
 • காங். கூட்டணி -- 165 இடங்கள்
 • மற்றவை -- 135 இடங்கள்
 • சி.என்.என். நியூஸ்
 • பா.ஜ.க. கூட்டணி -- 336 இடங்கள்
 • காங். கூட்டணி -- 82 இடங்கள்
 • மற்றவை --- 124 இடங்கள்
இந்த தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் தங்கள் பிரச்சாரத்தின் போது முழங்கி வந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னந்தனியாக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மோடியும், அதன் தேசிய தலைவர் அமித்ஷாவும் நம்பிக்கையோடு கூறி வந்தார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மோடி மீண்டும் பிரதமராவார் என்று கூறி வந்தார். இவர்களது நம்பிக்கையை மேற்கண்ட கருத்துக்கணிப்புகள் மெய்ப்பித்து விட்டன என்பது குறி்ப்பிடத்தக்கது. இந்த கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து