முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன - ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையால் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும்

புதன்கிழமை, 22 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்றம் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் முடிவை இணையதளங்கள் மூலமும், மொபைல் ஆப் மூலமும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வாக்குகள் எண்ணிக்கையோடு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால் இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளி வர காலதாமதமாகும்.

7 கட்டங்களாக...

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி, கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது.

பணிகள் தீவிரம்...

முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.

முதல் சுற்று நிலவரம்...

நாடுமுழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுகளை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம், மின்னணு எந்திரங்களை காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவிலும் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி வாக்கில் எந்த கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பதும் தெரியவந்து விடும்.

சற்று தாமதமாகும்...

வாக்கு எண்ணிக்கையில் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும், நடைபெறும் என்பதாலும், 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என்பதாலும், இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் இன்று இரவுக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தை பொறுத்த வரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையுடன் 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

45 மையங்களில்...

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றம் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, தமிழ்நாடு முழுவதும் 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 கம்பெனிகள் கொண்ட மத்திய போலீஸார் 1,520 பேரும், 62 கம்பெனிகள் கொண்ட தமிழ்நாடு ஆயுதப்படை போலீசார் 4,960 பேரும், தமிழ்நாடு போலீசார் 36 ஆயிரம் பேரும் என 45ஆயிரம் போலீசாரின் பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கை நடைபெறும். இதனிடையே மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்படும்.

30 நிமிடத்தில் வெளியீடு...

ஒவ்வொரு ரவுண்டு ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகளும் 30 நிமிடத்தில் வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கை அனைத்தும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மூலம் வீடியோ பதிவு செய்யப்படும். 4,014 வெப் காமிராக்கள் மூலமும் வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு தேர்தல் கமிஷன் தயார் நிலையில் உள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தையும் கண்காணிக்க 88 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களின் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அவர்களது  அனுமதியோடு அந்தந்த தேர்தல்அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடுவார்கள்.

சிறப்பு ஏற்பாடுகள்...

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனை நேரடியாக தெரிந்து கொள்வதற்காக தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்கான டிரண்டுகளை தேர்தல் ஆணையத்தின் http:\\results.eci.gov.in,  http:\\elections.tn.gov.in|results2019 ஆகிய இணையதளங்களில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை தவிர தலைமை செயலகத்திலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் மூலமும் தெரிந்து கொள்வதற்காக voter help line mobile app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை play store-ல் டவுன்லோடு செய்து அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து