முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இது மக்களின் வெற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் - ஜெகன் மோகன் ரெட்டி உறுதி

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : ஆந்திர மாநிலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த வெற்றியானது மக்களின் வெற்றி என்றும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது.

175 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், ஆட்சியமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பிற்பகல் நிலவரப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. வரும் 25-ம் தேதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அவர் சட்டமன்ற கட்சி தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், 30-ம்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெற்றி குறித்து ஜெகன் மோகன் ரெட்டி சமூக வலைத்தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் வெற்றியானது மக்களின் வெற்றி. இது எதிர்பார்த்ததுதான். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

வாக்காளர்கள் பெருமளவில் தங்கள் உரிமையை நிலைநாட்டி ஜனநாயகத்தின் மதிப்பை மேம்படுத்தியமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என பதிவிட்டுள்ளார். 

இதேபோல் பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

இதற்கிடையே தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதால் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவதாகவும் கூறினார். 

இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து