கருத்துக்கணிப்பை உண்மையென நிரூபித்த தேர்தல் முடிவுகள்: பார்லி. தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி - மீண்டும் பிரதமாகிறார் நரேந்திர மோடி - அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
BJP victory 2019 05 23

புது டெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவே ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அந்த கருத்துக்கணிப்புகளை உண்மையென நிரூபித்து விட்டது நேற்றைய தேர்தல் முடிவுகள். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 350 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராகிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், காந்தி நகர் தொகுதியில் அமித்ஷாவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை தழுவினார். மேலும் தேர்தல் தோல்வியை தான் ஒப்புக் கொள்வதாக கூறிய அவர், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

542 தொகுதிகளுக்கு...

பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 தொகுதிகளுக்கு தேர்தல் மூலமே எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த 543 பேரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மற்றபடி தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.

வேலூர் தொகுதி...

பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தில் வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உட்பட 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதீய ஜனதா கட்சி அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

கடுமையான பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம் இம்முறை கடுமையாக நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பிரச்சாரத்தின் போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையிலும் தாக்கிக் கொண்டார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரது சகோதரியான பிரியங்கா காந்தியும் உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படியாக அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த பிரச்சாரம் கடந்த 17-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. அதையடுத்து கடந்த 19-ம் தேதி பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை

பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு நேற்று (23-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பே டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. சி.என்.என். போன்ற பல ஊடகங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அதில் பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை ராகுலும், பிரியங்கா காந்தியும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஏற்கவில்லை. அதே நேரம் பாரதீய ஜனதா கட்சி இந்த கருத்துக்கணிப்பை முழுமையாக நம்பியது. கருத்துக்கணிப்பின் படி நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கையோடு கூறி வந்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தே.ஜ. கூட்டணி தலைவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. முன்னிலை...

இந்த நிலையில்தான் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதில் தொடக்கத்தில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களிலேயே பாரதீய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. பிறகு படிப்படியாக இந்த முன்னிலை அதிகரித்தது. இறுதியில் பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 542 இடங்களில் 350 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களையும், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 எம்.பி. தொகுதிகளிலும், சந்திரசேகர ராவ் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சி 8 தொகுதிகளையும், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 33 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தல் மூலம் பாரதீய ஜனதா கட்சிக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.

மீண்டும் மோடி பிரதமர்...

இதையடுத்து நாட்டின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி விரைவில் பதவியேற்கவிருக்கிறார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது வலிமையான பிரதமர் இந்த நாட்டுக்கு தேவை என்று குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார். அதை நிரூபிப்பது போல் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., தெலுங்குதேசம், டி.ஆர்.எஸ். கட்சி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்தன. சந்திரபாபு நாயுடு போன்ற சில தலைவர்கள் பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் இவர்களது முயற்சிகள் எல்லாமே தோற்றுப் போயின. குறிப்பாக, பிரதமர் மோடியை காலாவதியான பிரதமர் என்று மம்தா பானர்ஜி கிண்டலடித்து வந்தார். ஆனால் அவருக்கும் இந்த தேர்தலில் படுதோல்வியே கிடைத்துள்ளது.

அமேதியில் ராகுல் தோல்வி

இந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், அமேதி தொகுதியில் அவர் தோல்வியை தழுவி உள்ளார். மேலும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறிய அவர், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் மூலம் நான்தான் மீண்டும் பிரதமர் என்பதை நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். இவரது இந்த வெற்றி பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். விரைவில் இந்த நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து