எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் கிம்: டிரம்ப் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      உலகம்
kim-trump 2019 05 26

டோக்கியோ : வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என்றும், எனக்கு அளித்த வாக்குறுதியை கிம் காத்திடுவார் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து