முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகன்களுக்கு டிக்கெட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தனர் : ராகுல்காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 புதுடெல்லி : மகன்களுக்கு டிக்கெட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  

காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய டெல்லியில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங், பிரியங்கா, மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த முடிவை காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை.

தோல்வி குறித்து ஆராயும் போது ராகுல் காந்தி கட்சியின் கீழ்மட்ட தலைவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை சரியாக பிரசாரம் மூலமாக சேர்க்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கீழ்மட்ட தலைவர்கள் பிரசாரயுக்திகளை கையாளவில்லை. நான் மேற்கொண்ட பிரசார விஷயங்களை கூட வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட பிரசாரம் சரியில்லை என்று அவர் குறை கூறினார்.

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், ப.சிதம்பரம் போன்றவர்கள் தனது மகன்களுக்கு டிக்கெட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை ஏற்க மறுத்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சியை நடத்துவது? என்று ஆதங்கத்துடன் ராகுல் பேசினார்.

கட்சிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கட்டும். நாங்கள் மட்டும் (இந்திரா காந்தி குடும்பம்)தான் தொடர்ந்து தலைவர்களாக இருக்க வேண்டுமா? என்று உணர்ச்சிவசமாக பேசினார்.

அப்போது அவரை ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல், ப.சிதம்பரம் ஆகியோர் அமைதிப்படுத்தினார்கள்.

பிரியங்கா கூறும்போது, ராகுல் காந்தி தலைவராக இருக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா நினைக்கிறது. அவர் ராஜினாமா செய்தால் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஈடேறி விட்டதாக ஆகி விடும் என்றார்.

சிலர் கூறும்போது, நீங்கள் ராஜினாமா செய்தால் அடுத்து கட்சிக்கு யார் தலைவர்? என்பதை சொல்ல முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்டனர்.

மேலும் சிலர் கூறும் போது, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக தாக்கி பேசுவதால் நீங்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

நீங்கள் ராஜினாமா செய்வதன் மூலம் அவர்கள் விருப்பம் நிறைவேறி விடும். இதற்கு இடமளிக்க கூடாது என்று சொன்னார்கள்.

பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி போன்றவையால் தான் மோடியின் செல்வாக்கு திடீரென உயர்ந்து அவர் வெற்றி பெற வாய்ப்பாக ஆகி விட்டது என்று பலரும் கூறினார்கள். பலர் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அப்போது ஏ.கே. அந்தோணி குறுக்கிட்டு முறைகேடுதான் காரணம் என்று நாம் பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. கட்சியை அடிப்படை ரீதியாக நாம் இன்னும் வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

அப்போது ராகுல் காந்தி கட்சியின் எல்லா மட்டத்திலும் ஆய்வு செய்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கட்சி பணிகளில் மாற்று முறையை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அனைவரும் ஒத்துழைத்தால் தான் இதை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் பாரதிய ஜனதாவை வளர்க்கும் பணியை கடுமையாக செய்கிறார்கள். அதே போன்று காங்கிரசிலும் பணிகள் இருக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து