முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் உள்ள ஏழைகளுக்காக எனது அரசு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் - எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாட்டில் உள்ள ஏழைகளுக்காக எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது:–

உலகமே இந்த தேர்தலை மிகவும் உன்னிப்பாக கவனித்தது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நமது மக்களின் தீர்ப்பு வழங்கும் ஆற்றலை எந்தவகையிலும் கணக்கிட முடியாது. தேர்தலே ஒரு திருவிழா போல நடைபெறுகிறது. அதை விட தேர்தல் முடிவை கொண்டாடுவது அதைவிட சிறப்பானதாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள மக்களும் இதில் இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த தேர்தல் தடைகளை உடைக்கவும், இதயங்களை இணைக்கவும், சமுதாயத்தை ஒருங்கிணைக்கவும் ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நாம் அனைவரும் அதில் ஒரு சாட்சியாக இருக்கிறோம். இன்று நம் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்காக நாம் இங்கு இருக்கிறோம். இன்னும் நாம் யாருடைய நம்பிக்கைகளை எல்லாம் பெற வேண்டுமோ அவர்களுக்காகவும் நாம் இங்கு இருக்கிறோம்.

மோடி மோடிக்கே சவால் விடுத்து, 2014 தேர்தல் வெற்றியின் அனைத்து சாதனைகளையும் உடைத்து புதிய சாதனை ஏற்படுத்தி இருக்கிறோம். 2014 -19 காலகட்டத்தில் நாம் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தினோம். எனவே இது ஏழைகள் தேர்ந்தெடுத்த அரசு என்றே கூறலாம். நமது நாட்டுக்கு சேவையாற்றும் எண்ணத்துக்காக மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டுள்ளனர். அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் நாம் பயணிக்கும் போதும் மக்களுக்கு எப்போதும் உதவி செய்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நாம் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். சில கருத்துகள் நமக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதுவரை இருந்த அரசியல் ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும் துரோகம் இழைப்பதாகத் தான் இருந்தது. ஓட்டு வங்கி அரசியலை நம்பியவர்கள் ஒரு கற்பனை பயத்தை உருவாக்கி பரப்பியதன் மூலம் சிறுபான்மையினர் அச்சத்தின் பிடியிலேயே வைக்கப்பட்டு இருந்தனர். இதற்கு நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும்.

புகழுக்கும், முக்கிய பிரமுகர் என்ற கலாச்சாரத்துக்கும் எம்.பி.க்கள் அடிமையாக கூடாது. தேவைப்படும் இடங்களில் நாமும் மற்ற குடிமக்கள் போல வரிசையில் நிற்க வேண்டும். எனது அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள தலித்துகள், ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், பழங்குடியினர்கள் ஆகியோருக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும். இந்த 5 வருடங்களில் நாம் அந்த எண்ணத்தில் இருந்து விலகிவிடக் கூடாது. ஏழைகளும், சாதாரண மக்களும் தான் எனக்கும், எனது அரசுக்கும் கடவுள் போன்றவர்கள். ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்வதை விட வேறு சிறந்த பாதை இருக்க முடியாது. நாம் இப்போது புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக புதிய சக்தியுடன் புதிய பயணத்தை தொடங்குகிறோம். நமது தேச நலனும், பிராந்திய அபிலாஷைகளும் தான் நமது லட்சியம். மந்திரி பதவிகளுக்கு பரிசீலிக்கப்படும் பெயர்கள் என ஊடகங்களில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். விதிமுறைகளுக்கு ஏற்ப பொறுப்புகள் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து