கோதாவரி - கிருஷ்ணா நதி இணைப்பு திட்டம் - நிதின் கட்காரிக்கு முதல்வர் எடப்பாடி நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
cm edapadi 2019 03 03

சென்னை : தமிழக குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது தான் எங்கள் முதல்வேலை என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாக பெருக்கும் வகையில் காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கை அடிப்படையிலும் தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியதின் அடிப்படையிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவிரி -கோதாவரி இணைப்புத் திட்டம்விரைவில் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 25- ம் தேதி தமிழக பா.ஜ.க. டுவிட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கீழ்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டு மக்கள் எங்களை புறக்கணித்தாலும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் கோதாவரி - கிருஷ்ணா நதிநீர்இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் எங்கள் முதல் வேலை எனத் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீநர் பங்கீடு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடிவரை தண்ணீர் கிடைக்கும்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேற்கண்டவாறு அறிவித்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த நதிநீர் இணைப்பு திட்டம் மிக மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கூடிய அற்புதமான திட்டம். அப்படி ஒரு திட்டத்தை அறிவித்த மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து