ஜனாதிபதி மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு - நாட்டின் பிரதமராக மோடி 30-ம் தேதி பதவியேற்கிறார் - புதிய அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
pm modi 2019 05 01

புது டெல்லி : ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றைய தினம் நாட்டின் பிரதமராக மோடி 2-வது முறையாக  பதவியேற்கவிருக்கிறார். புதிய அமைச்சர்களும் அன்றைய தினம் பதவியேற்பார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பா.ஜ.க. அமோக வெற்றி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்தது.

அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில் பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பது குறித்தும் 17-வது மக்களவையை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு ஜனாதிபதியை சந்தித்து 16-வது மக்களவையை கலைக்கும் படி பரிந்துரை செய்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி 16-வது மக்களவையை  கலைத்து உத்தரவிட்டார்.

எம்.பி.க்கள் கூட்டம்

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற குழு தலைவர் பதவிக்கு (பிரதமர் பதவி) மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோர் முன்மொழிந்தனர்.

பிரதமராக தேர்வு

இதை ஏற்று நரேந்திர மோடியை பாராளுமன்ற குழு தலைவராக (பிரதமராக) தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அரங்கு நிறைந்த கரவொலி எழுந்தது. இதையடுத்து தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலில் அமித்ஷா, மோடிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். அவரை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியை வாழ்த்தி பேசினார். தலைவர்களின் வாழ்த்துக்களை மோடி ஏற்றுக் கொண்டார். பிறகு பேசிய அவர், புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆட்சி அமைக்க அழைப்பு

இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திரமோடி அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று முன்தினம் சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய அரசு அமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களை ஜனாதிபதியிடம் அமித்ஷா வழங்கினார்.

30-ம் தேதி பதவியேற்பு விழா

இந்த நிலையில் டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது. ஜனாதிபதி மாளிகையில் அன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைப்பார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று வாரணாசி செல்லும் பிரதமர் மோடி அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து