அமோக வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் மக்களுக்கு இன்று மோடி நன்றி தெரிவிக்கிறார் - திறந்த வேனில் பேரணியாக செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
modi 2019 05 23

லக்னோ : இரண்டாவது முறையாக தன்னை தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று அங்கு செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திறந்த வேனில் பேரணியாக சென்று மக்களை சந்தித்து அவர் நன்றி தெரிவிக்கிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்று, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார். ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று வாரணாசிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடும் செய்யும் மோடி, அந்த தொகுதியில் இன்று முழுவதும் பல கூட்டங்களில் பங்கேற்கிறார். மற்றும் சில முக்கிய சாலைகள் வழியாக திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி வாரணாசி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி 352 இடங்களை கைப்பற்றியது. இவற்றில் பாரதீய ஜனதா மட்டும் கிட்டத்தட்ட 303 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை நடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அந்த போட்டியை தூள்தூளாக்கி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது பாரதீய ஜனதா கட்சி. குறிப்பாக வட மாநில மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த அமோக வெற்றியை பரிசாக அளித்திருக்கிறார்கள். மோடிக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அமைக்க ராகுல் காந்தி தவறியதே காங்கிரசின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அவர் விரும்பிய போதிலும் கூட சில மாநில முதல்வர்கள் அவரது கூட்டணி முயற்சிக்கு கைகொடுக்கவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சி திட்டங்களை பற்றி சொல்லாமல் மோடியை வசைபாடுவதிலேயே குறியாக இருந்தது. அது மட்டுமல்ல, மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் போன்ற தலைவர்களின் பேராசையே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது. இவர்கள் எல்லோருக்குமே பிரதமராக வேண்டும் என்ற பேராசை இருந்து வந்தது. ஆனால் இவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போனதே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து