சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் உடலை சுமந்த ஸ்மிருதி இராணி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      இந்தியா
Smriti Irani 2019 05 26

லக்னோ : அமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடலை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று சுமந்து சென்றார். 

உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து அவருடன் இரவும் பகலுமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர்களில் முக்கியமானவர் பரவுலி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங். இவர்மீது ஸ்மிருது இரானி மிகவும் அன்பு செலுத்தி, சகோதரராக பாவித்து பழகி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுரேந்திரா சிங் மரணம் தொடர்பான செய்தியை அறிந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். நேற்று பிற்பகல் நடந்த இறுதி யாத்திரையில் பங்கேற்ற அவர் கண்ணீர் மல்க சுரேந்திரா சிங்கின் உடலுக்கு தோள்கொடுத்து சுமந்து சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து