பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பட்டம் வெல்வாரா நடால்?

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      விளையாட்டு
nadal title win 2019 05 26

பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. 12-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் நடால் ஆயத்தமாகி உள்ளார்.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கி வருகிற 9-ம் தேதி வரை நடக்கிறது. களிமண் தரையில் நடத்தப்படும் பிரெஞ்ச் ஓபனில் எப்போதும் கில்லாடியாக திகழும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலே இந்த முறையும் வாகை சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே 11 முறை பிரெஞ்ச் ஓபனை உச்சிமுகர்ந்து யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் நடால் தனது முதலாவது சுற்றில் தகுதிநிலை வீரரான யானிக் ஹான்ப்மானை (ஜெர்மனி) சந்திக்கிறார். நடாலுக்கு, நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தான் கடும் சவாலாக இருப்பார்.

2018-ம் ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், 2019-ல் ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி இருக்கும் ஜோகோவிச், இங்கும் பட்டம் வென்றால் ஓபன் எரா வரலாற்றில் வரிசையாக 4 கிராண்ட்ஸ்லாமையும் இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். சமீபத்தில் இத்தாலி ஓபன் இறுதிசுற்றில் நடாலிடம் தோற்று இருந்த ஜோகோவிச் அதற்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் உள்ளார். ஜோகோவிச் முதல் சுற்றில் ஹூபர்ட் ஹர்காசை (போலந்து) சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வெல்வதில் முன்னணி வீராங்கனைகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபனை வென்றவரான நம்பர் ஒன் புயல் நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்ச் ஓபனிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவர் முதல் சுற்றில் அன்ன கரோலினா சிமிட்லோவாவுடன் (சுலோவக்கியா) மோதுகிறார். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.331 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.18 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இறுதிப்போட்டியில் தோல்வி அடையும், வீரர், வீராங்கனை ரூ.9 கோடியை பரிசாக பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து