பயங்கரவாதி சுட்டுக்கொலை: காஷ்மீரில் 4-வது நாளாக பள்ளி, கல்லூரிகள் மூடல்

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
terrorist shotdead 2019 05 27

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி ஜாகீர் மூசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதையடுத்து, பதற்றம் நீடிப்பதால், நான்காவது நாளாக நேற்றுபள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கடந்த 23-ம் தேதி போலீசார் மற்றும் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகீர் மூசா கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டன.  

நான்காவது நாளாக நேற்றும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. புல்வாமாவில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அனந்த்நாக் மாவட்டத்தில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெகரா நகரில் டிகிரி கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. மற்ற பகுதிகளில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து