நாட்டிற்காக தியாகம் செய்ய தயார் - ரேபரேலி மக்களுக்கு சோனியா கடிதம்

திங்கட்கிழமை, 27 மே 2019      இந்தியா
sonia 2019 05 27

ரேபரேலி : ரேபரேலி தொகுதி மக்களுக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயார் என்று கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்த போதிலும், அங்குள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் சோனியா காந்தி கூறி இருப்பதாவது:-

எல்லா நாடாளுமன்ற தேர்தல்களையும் போலவே இந்த தேர்தலிலும் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்து இருக்கிறீர்கள். இதற்காக ரேபரேலி தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுவாபிமான் தளம் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொகுதியில் எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எல்லோரின் முன்பும் எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. நீங்கள்தான் எனது குடும்பம். நீங்கள்தான் எனது சொத்து. உங்களிடம் இருந்துதான் எனக்கு சக்தி கிடைக்கிறது.

வரும் நாட்கள் மிகவும் சோதனையான காலகட்டம் என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு ஆகியவற்றின் மூலம் எதிர்நோக்கியுள்ள சவால்களை வெல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நாட்டின் நலன்களையும் மற்றும் காங்கிரசில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய பண்புகளையும் பாதுகாக்க எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன். இதை நான் உங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து