முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் ராகுல்; 5-வது நாளாக தலைவர்கள் சமரச முயற்சி

புதன்கிழமை, 29 மே 2019      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பிடிக்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து அதனை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ஆனால் ராகுல் அதற்கு சம்மதிக்கவில்லை. ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருந்தார்.

அதன்பிறகு ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்களும் ராகுலை சமரசம் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரை சமரசம் செய்ய சென்ற மூத்த தலைவர்களை அவர் சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில தலைவர்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில காங்கிரஸ் ஆட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ராகுல் அவர்களிடம் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் அக்கறை காட்டாத சில மூத்த தலைவர்கள் பற்றி புகார் தெரிவித்ததுடன் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். தனது ராஜினாமாவை திரும்பபெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ராகுலை சந்தித்து சமரச முயற்சி மேற்கொண்டார். 

இந்தநிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக் கூடாது. இது கட்சிக்கு முக்கியமான காலகட்டம். ராகுல்காந்தி ராஜினாமா செய்வது காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அவர் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பது நல்லது என்று கருத்து கூறினார்கள். ஆனாலும் ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். அவரது மனநிலை மாறவில்லை. நேற்று  5-வது நாளாக ராகுல் காந்தியின் பிடிவாதம் தொடர்கிறது. ராகுலை சமரசம் செய்வதற்காக ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு மாதிரியான யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள். ராகுல்காந்தி தலைவர் பதவியிலேயே நீடிக்கட்டும். மேலும் செயல் தலைவர் பதவியை உருவாக்கி செயல் தலைவர்களாக சிலரை நியமிக்கலாம். தலைவர் பொறுப்பை ராகுல் கவனித்தால் கட்சியின் மற்ற நடவடிக்கைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக வேண்டாம் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால் அதற்கும் ராகுல் காந்தி உறுதியான பதிலை சொல்லவில்லை.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி விரைவில் கேரள மாநிலம் வயநாடு செல்ல இருக்கிறார். அவர் வயநாடு செல்வதை பொறுத்து மீண்டும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் காரிய கமிட்டி கூடுமா என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக ராகுல்காந்தியை சமரசம் செய்வதிலேயே மூத்த தலைவர்கள் பலர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் சமரசம் ஆகாமல் தொடர்ந்து பிடிவாதமாகவே இருக்கிறார். இதற்கிடையே பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் அந்த பதவியில் நீடித்த படியே கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து