முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பழைய பாஸையே பயன்படுத்தலாம் - விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகளை இன்றே வழங்கவும் துரித ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, ஊராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இன்றே வழங்க துரித ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை அரசு வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள். சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் 3,60,000 பஸ் பாஸ்களும், விழுப்புரம் - 4,70,435, சேலம் - 2,94,800, கோவை - 3,40,000, கும்பகோணம் - 3,76,558, மதுரை- 3,30,000, திருநெல்வேலி - 2,49,555 என மொத்தமாக 24 லட்சத்து 21 ஆயிரத்து 348 பஸ் பாஸ்கள் இந்தாண்டு வழங்கப்பட உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு வரை அட்டை வடிவில் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வழங்கப்படும் பஸ் பாஸ், மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இன்று ( 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படவுள்ள காரணத்தினால் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பஸ் பாஸை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பஸ்களில் மாணவர்கள் சீருடையில் வந்தால் அவர்களை இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார். எனவே மாணவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி பேருந்துகளில் தொடர்ந்து பயணம் செய்யலாம்.

இந்த நிலையில் இன்று அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவிருப்பதால் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இன்றே வழங்க அரசு துரித ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து