முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம்,கள்ளிக்குடி பகுதிகளில் மக்காச்சோள பயிர்களை தாக்கிடும் படை புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறையின் அட்வைஸ்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி,வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் படை புழு தாக்குதல் அதிகரித்து வருவதால் அங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து படை புழுக்களை கட்டுப்படுத்திட இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இஞ்சி-பூண்டு கரைசல் மற்றும் வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் படை புழுக்களை கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
 மதுரை  மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி வட்டாரத்தில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கடந்த சில நாள்களாக மக்காச்சோள பயிர்கள் வாடல் ஏற்பட்டு காய்ந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து  பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த ஆண்டைப் போல்  மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
 திருமங்கலம், கள்ளிக்குடி,பகுதிகளில் உள்ள மக்காச்சோள பயிர்களை  நேரில் பார்வைையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் படைப்புழு தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் களைகள் இல்லாமல் கோடை உழவு செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இஞ்சி பூண்டு கரைசல், வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் படைப்புழு பரவாமல் தடுக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டை போலவே தற்போதும் இப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது அதிகரித்து வரும் படைபுழு தாக்குதலால் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
 இதுகுறித்து கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த வகை படை புழுக்கள் இரண்டாவது முறையாக தாக்கியுள்ளது.
வேகமாக பரவிவரும் இந்த வகை படை புழுவை வேளாண் துறையினர் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அருகிலுள்ள மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் இது பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இதனை கட்டுப்படுத்திட வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து