முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்பு- எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி : புதுவை சட்டசபை சபாநாயகராக சிவக்கொழுந்து நேற்று  பதவியேற்றார். சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில் என்ஆர்.காங்கிரஸ், அதிமுக, பா.ஜனதா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

புதுவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். இதனால் துணை சபாநாயகரான சிவக்கொழுந்து சபாநாயகர் பொறுப்பை வகித்து வந்தார்.பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் புதுவை சட்டசபையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு முன்பாக புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர்  தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலகம் அறிவித்திருந்தது. ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் சபாநாயகராக சிவக்கொழுந்துவை பரிந்துரை செய்து 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. எதிர் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா சார்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் போட்டியின்றி சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகர் பதவியேற்புக்காக புதுவை சட்டமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. தற்காலிக சபாநாயகர் அனந்தராமன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதல் நிகழ்வாக சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுபவர் பெயரையும், அவரை முன் மொழிந்து, வழிமொழிந்தவர் பெயரையும் வாசித்தார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கு உறுப்பினர் சிவக்கொழுந்து ஒருவரே போட்டியிடுவதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என அறிவித்தார். தேர்வு செய்யப்பட்ட சிவக்கொழுந்துவை ஆசனத்திற்கு வந்து பதவியேற்கும்படி அழைத்தார். சபாநாயகர் சிவக்கொழுந்துவை முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், தி.மு.க. கட்சித் தலைவர் சிவா ஆகியோர் அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது. புதிய சபாநாயகர் சிவக்கொழுந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் பேசினர்.

சபாநாயகர் தேர்தல் போதிய கால அவகாசமின்றி சட்டசபை விதிகளை மீறி நடத்தப்படுவதாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி சபாநாயகர் பதவியேற்பை புறக்கணிப்போம் என அறிவித்திருந்தது. இதன்படி சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பா.ஜனதா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். சபை நிகழ்வில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து