முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் குண்டுமழையை நிறுத்துங்கள் - ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.  

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பல்வேறு குழுவினரை ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். 

இருதரப்பினரிடையே நடைபெற்றுவரும் சண்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிர் பயத்தில் சுமார் 3 லட்சம் மக்கள் அருகாமையில் உள்ள துருக்கி நாட்டின் எல்லைப்பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுதவிர, சிரியாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளில் சிலர் சிரியா-ஈரான்-துருக்கி எல்லைப்பகுதிகளில் பதுங்கி இருந்துகொண்டு அவ்வப்போது சிரியா ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்துகின்றனர்.

குறிப்பாக, சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போராளிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையில் உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது.  இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்-தாஹிர் அல்-ஷாம் குழுவினரை குறிவைத்து நடத்தப்படும் இந்த தாக்குதலில் ரஷியா நாட்டின் விமானப்படைகளும் இணைந்துள்ளன.

மேலும், அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ஆதரவாக ஈரான் நாட்டு விமானப் படைகளும் இட்லிப் மாகாணத்தின்மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன. இந்த முத்தரப்பு தாக்குதலில் சிக்கி கடந்த ஒருவாரத்தில் மட்டும் அப்பாவி பொதுமக்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதற்காக புறப்பட்டு சென்ற டிரம்ப், முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷியா, சிரியா மற்றும் ஈரான் நாட்டு படைகள் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி பொதுமக்கள் பலரை கொன்று குவித்து வருகின்றன. ஈவிரக்கமற்ற இந்த படுகொலைகளை உலகம் கவனித்து வருகிறது. எதற்காக இந்த தாக்குதல்? இதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நிறுத்துங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து