முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் உள்ளிட்ட 'இந்தி' பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியை கற்க வேண்டிய அவசியமில்லை - தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட 'இந்தி' பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியை கற்க வேண்டிய அவசியமில்லை என்று தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பரிந்துரைகள்...

நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கை அமலில் உள்ளது. சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த கல்வி கொள்கையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவு செய்தது.

அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கைகளை உருவாக்க டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை வரையறுத்து அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வேறு ஒரு புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் 8 பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் நாடு முழுவதும் ஆய்வு செய்து புதிய பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரித்தனர்.

புதிய திட்டங்கள்...

கடந்த வெள்ளிக்கிழமை அந்த அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. உடனடியாக அந்த அறிக்கை இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. 484 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் நாடு முழுவதும் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதிய திட்டங்களுக்கான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 8-ம் வகுப்பு வரை தாய் மொழி வழிகல்வியை கட்டாயம் பயில வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3-வது மொழியாக...

மேலும் மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இந்தி அல்லாத மற்ற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் 3-வது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தி கற்றுத்தரப்பட வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு செல்வதற்கு முன்பு ஒவ்வொரு மாணவனும் தலா 3 மொழிகளில் நன்றாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை கஸ்தூரிரங்கன் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்...

ஆனால் இந்த பரிந்துரைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திட்டமிட்டு இந்தியை தமிழக மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மத்திய அரசு தனது பரிந்துரையை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன.கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை இணைய தளத்தில் வெளியான சில மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. பரிந்துரை மட்டும்தான் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மீதான புதிய கல்வி கொள்கை பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இ.மெயில் மூலம் மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

அமைச்சர் உறுதி...

இதற்கிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயைன் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் இருக்கும் என்றார். மேலும், இருமொழிக் கொள்கையை தான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் அ.தி.மு.க.வின் நிலைபாடு என்று தெரிவித்தார்.

மத்திய அரசு முடிவு...

எதிர்ப்பை அடுத்து கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2 தினங்களாக மத்திய அரசு அதிகாரிகள் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள எந்தெந்த பரிந்துரைகளை மாற்றம் செய்யலாம் என்று ஆய்வு செய்தனர். அதன்படி இந்தி பேசாத மாநில மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. வரைவு திட்டத்தில் செய்யப்பட்டுள்ள அந்த முக்கிய மாற்றங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டாயம் இல்லை...

திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியை மாணவர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் வரைவு திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்திதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்து வேறு மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த வரைவு திட்ட திருத்தங்களை மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து