முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடப்பாண்டில் 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

ஆய்வு செய்ய...

சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் செட்டிநாடு வித்யாசிரமம் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் நேற்று பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்த பின்னரே இயக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதே வழியில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1,433 வாகனங்கள்...

தமிழகத்தில் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்கள் இருக்கின்றன. இதில் 31 ஆயிரத்து 143 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 9 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்து 433 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதையும் ஆய்வு செய்த பின்னரே அவற்றை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவை ஆய்வு செய்த பிறகே குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்.

அதிகாரிகளுக்கு...

தமிழகத்தில் சென்ற ஆண்டு 20 லட்சத்து 55 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு வரும் 17-ம் தேதி கடைசிநாள். ஒப்பந்தப் புள்ளிகள் முடிந்ததும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி விரைவில் தொடங்கும். இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். அது வரை பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் அவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை அணிந்திருந்தாலே பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களது பழைய பயண அட்டையை காண்பித்தாலே அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.

மின்சார பேருந்து...

தமிழகத்தில் மின்சார பேருந்து இயக்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். முதற்கட்டமாக, சென்னை, மதுரை கோவை ஆகிய மாவட்டத்தில் 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் மானியத்தில் மின்சார பேருந்துகள் தமிழகத்தில் விரைவில் இயக்கப்படும். மேலும் உலக அளவில் வெப்பமயமாதலை தடுப்பதற்கான 12 ஆயிரம் மாசில்லா பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமங்களில்...

ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து மாநகரங்களில் விழிப்புணர்வு அதிகளவு இருக்கிறது. எனவே அதிகமான எண்ணிக்கையில் நகரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிகிறார்கள். அந்தளவுக்கு கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் குறைவான மக்களே ஹெல்மெட் அணிகிறார்கள். போக்குவரத்துத் துறையினரும், போலீசாரும் லட்சக்கணக்கானோரிடம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறார்கள். ஹெல்மெட் கட்டாயமாக்கும் சட்டத்தை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.

எலெக்ட்ரானிக் மீட்டர்...

பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் போதே வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை அதிகமாக இருந்தால் அவை முறைப்படுத்தப்படும். மக்களிடமிருந்து அது குறித்து கோரிக்கை வந்தால் உரிய வகையில் பரிசீலிக்கப்படும். ஆட்டோக்களுக்கு எலெக்ட்ரானிக் மீட்டர் அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளிகள் போடப்பட்டு விட்டன. மிக விரைவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்படும். அந்த எலெக்ட்ரானிக் மீட்டரிலேயே கட்டணத்திற்குரிய ரசீது வரும். அந்த மீட்டரிலேயே பயணிகளுக்கான புகாரும் பெறப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டறையில் நடவடிக்கை எடுக்கப்படும். 

கேமராக்கள் மூலம்...

அரசு பேருந்துகள் 80 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகத்தில் பேருந்துகள் செல்லாது. 22 ஆயிரம் பேருந்துகள் இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடப்பதை போல் தெரிகிறது. வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கள் நடைபெற்றாலும் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு பேருந்து ஒட்டுனர் மீது தவறிருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசு பேருந்துகள் மூலமான விபத்து முன்பை விட குறைத்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து