ஆந்திர கவர்னராக நியமனமா? செய்திக்கு சுஷ்மா ஸ்வராஜ் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Sushma Swaraj 2019 04 21

புது டெல்லி : ஆந்திர மாநில கவர்னராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ். உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில கவர்னராக சுஷ்மா ஸ்வராஜை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கவர்னராக நரசிம்மன் பதவி வகித்து வருகிறார். எனவே, நரசிம்மனை தெலுங்கானாவுக்கு மட்டும் கவர்னராக தொடரச் செய்து விட்டு, ஆந்திர மாநில கவர்னராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவித்தன. அதே நேரம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அதை ஹர்ஷர்வர்தன் நீக்கினார்.

இந்நிலையில், ஆந்திர மாநில கவர்னராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதவில்,

வெளியுறவுத்துறை அமைச்சக பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பாக, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்ததாகவும், அதற்குள் டுவிட்டரில் தன்னை ஆந்திரா கவர்னராக நியமித்து விட்டனர் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். ஆந்திரா கவர்னராக தன்னை நியமித்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், சுஷ்மா தனது மற்றொரு டுவிட்டில் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து