கன்னியாகுமரியில் தொடர் மழை - அருவிகளில் குளிக்க தடை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      தமிழகம்
kanyakumari rainfall 2019 06 11

நாகர்கோவில் : திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.    

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்தது.

நாகர்கோவிலில் நேற்று முன்தினம் மாலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

கொட்டாரம், மயிலாடி, இரணியல், ஆணைக்கிடங்கு, குளச்சல், குருந்தன்கோடு, அடையாமடை, கோழிப்போர் விளை, முள்ளாங்கினாவிளை, புத்தன் அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மலையோர பகுதியான பாலமோர் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கனமழை பெய்தது. பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 102.4மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5½ அடியும் உயர்ந்துள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 8.50 அடியாக இருந்தது. அணைக்கு 1801 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று  மதியம் அணையின் நீர்மட்டம் 10 அடியை எட்டியது. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 20 அடி உயரம் மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். இதனால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 6.59 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 6.69 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 42.98 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று காலை மைனஸ் 17.50 அடியாக இருந்தது.

மாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குளங்களில் தண்ணீர் பெருக தொடங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து