அரபிக் கடலில் உருவான 'வாயு' புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது - தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      தமிழகம்
rain 2019 04 10

புதுடெல்லி : அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத் மாநிலத்தில் நாளை கரையை கடக்கிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்திலும் தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

வாயு புயல்...

தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தாழ்வு உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 'வாயு' புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் நாளை 13-ல் வாயு புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வாயு புயலால் நாளை 13-ம் தேதி 135 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் நிலையில்...

வடக்கு நோக்கி நகரும் வாயு புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இதனால் வருகிற நாளை மற்றும் நாளை மறுநாள் குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளை உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் மழை...

இந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் சில மாவட்டங்களில் வெப்பத்தால் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே குமரி, நெல்லை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஒரு விமோசனம் பிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து