குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்: அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 12-ம் நாள்...

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

செய்யும் தொழிலே தெய்வம்! அதை குழந்தைகள் செய்தால் பாவம். குழந்தைப் பருவம் மனித வாழ்வின் பொற்காலம்.  பள்ளி சென்று கல்வி பயிலவும், ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய குழந்தைப் பருவத்தில் வேலைக்கு செல்வதென்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தைத்  தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பல்வேறு உதவிகள்...

கல்வி எனும் செல்வம் பெற்று வளர்ந்து செழித்து மிளிர வேண்டிய பருவத்தில், வேலை பளுவினைச் சுமந்து நிற்கின்ற குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழ்நாடு அரசின் அடிப்படை குறிக்கோளாகும். 

இக்குறிக்கோளை விரைவில் எட்டிடவும், வளமான மனித வளத்தினை உருவாக்கவும், குழந்தைகளின்பால் மிகுந்த அன்பு கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பை, முட்டையுடன் கூடிய பல வகையான சத்தான மதிய உணவு, கல்வி உபகரணங்கள், மடிக்கணிணி, மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து வசதி மற்றும் உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத்  தொழிலாளர்களுக்கு  மாதாந்திர ஊக்கத்தொகை என எண்ணற்ற உதவிகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

உரிமைகளை மதிப்போம்

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தடை செய்து, அதனை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு  தினத்தில் நாம் அனைவரும் குழந்தைகளின் உரிமைகளை மதித்திடுவோம்.

ஒத்துழைக்க வேண்டும்...

குழந்தைகளை, வேலைக்கு அனுப்ப மாட்டோம் எனப் பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதியேற்று தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றிட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து