இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - அமைச்சர்கள் - எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : அ.தி.மு.க. மாவட்டசெயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நடைபெறுகிறது.

இன்று நடக்கிறது...

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஒரு எம்.பி.யும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக அதிகரித்தது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் மேலும் 2 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் வகையில் மக்களின் நம்பிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

பார்லி. தொடர்...

இந்த கூட்டத்தில் வரும் 17-ம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்தும், சட்டமன்றத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் மானியக் கூட்டத் தொடர் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை...

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் வரும் இன்று (12-ம் தேதி) காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முதல் கூட்டம்...

மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் அ.தி.மு.க.வின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து