13 பேருடன் மாயமான விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
missiang plane 2019 06 11

புது டெல்லி : அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்காட்டிலிருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு சியாங் மாவட்டத்துக்கு இந்திய விமானப் படையின் ஏ.என் - 32 ரக விமானம், கடந்த  3-ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த விமானம், இந்திய விமானப் படையில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. விமானத்தில் 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட இந்திய விமானப் படை விமானங்கள்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. மேலும் ராணுவம், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் உதவியுடனும் தேடுதல் பணி நடந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 8 நாட்களுக்கு பின்னர் மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது 12 ஆயிரம் அடி உயரம் உள்ளது. மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து