இலங்கை - வங்கதேசம் ஆட்டம் ரத்து: மேலும் சில ஆட்டங்கள் மழையால் ரத்தாக வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
Rain Play delay 2019 06 11

பிரிஸ்டல் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதேபோல் மேலும், சில ஆட்டங்கள் மழையால் ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தலா ஒரு புள்ளி...

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான நேற்று பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுவதாக இருந்தது. மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. இந்நிலையில், பிரிஸ்டலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நடக்கவிருந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டமும் மழையின் காரணமாக கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில ஆட்டங்கள்...

மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதுவரை 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் மிகவும் முக்கியமான தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. 2 ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டுள்ளது.

பாதிப்பை...

கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் மோத வேண்டிய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுகிறது. முன்னணி அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் பாதிப்பு...

தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே 3 ஆட்டத்தில் தோற்றுவிட்டது. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 2 புள்ளியை பெறும் ஆர்வத்தில் இருந்தது. மழையால் 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. இது அந்த அணியை பாதித்து இருந்தது. இதேபோல் பலவீனமான தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் இருந்தது. 1 புள்ளி மட்டுமே கிடைத்ததால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் சில ஆட்டங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

70 சதவீத வாய்ப்பு...

நேற்று பிரிஸ்டோல் மைதானத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பபட்டது. 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த ஆட்டமும் கைவிடப்பட்டது.  இதேபோல ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் சவுத்தாம்ப்டனில் மோத உள்ள ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 13-ந்தேதி நாட்டிங்காமில் மோதுகின்றன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து