தமிழக திட்டங்களுக்கான நிதியை வழங்குங்கள்: மத்திய அமைச்சர்களை சந்தித்து எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      தமிழகம்
SP Velumani meet minister 2019 06 11

சென்னை : தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுடெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக குடிநீர் திட்டங்களுக்காக ரூ.5 ஆயிரத்து 398 கோடி நிதி உதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர்களுடன்...

நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் மற்றும் தூய்மை பாரதம் திட்டங்கள் குறித்த மாநில அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஅங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழகம் நாட்டிலேயே பல்வேறு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதையும் மத்திய அரசின்திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே 2017-18-ம் ஆண்டிற்கான நடவடிக்கைகளுக்கு ரூ.560.15 கோடி வழங்க வேண்டும் என்றும், 2018-19-ம் ஆண்டில் 14 வது நிதிக்கமிஷன் அறிவித்தப்படி ஊரக, புறநகர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாவது தவணை அடிப்படை மானியமாக ரூ1,608.03 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விமான நிலையம்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 லட்சம் வீடுகள் கட்டி வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கோயமுத்தூர் விமானநிலைய விரிவாகக்கம் தொடர்பாக 627 .89 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. அதில் 365 ஏக்கர் மட்டுமே விரிவாக்கத்திற்கு விமானநிலைய ஆணையம் பயன்படுத்த மறுஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்காக கையகப்படுத்தப்பட்ட 627.89 ஏக்கர் நிலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன். விமானநிலைய விரிவாக்கம் நிறைவடைந்தால் விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தனது அமித்ஷாவுக்கு அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னையில்...

அதே போல் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி, நீர்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் ஆகியோரையும் சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர் அளித்த மனுவில் தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு குறைந்த அளவே மழைப்பொழிவு இருந்தது. இந்த ஆண்டும் வழக்கத்திற்கு மாறாக 24 சதவீதத்திற்கும் குறைவான மழையே பொழிந்துள்ளது. பருவமழை பொய்த்தததன் காரணமாக குடிநீர் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் சவாலை சந்திக்க நேர்ந்துள்ளது. சென்னையில் குடிநீர்வழங்க இரண்டு மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.7337.78 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1,800 கோடி...

இந்த திட்டத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாள்தோறும் 550 எம்.எல்.டி. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தமிழ்நாட்டின் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற ரூ.5,398 கோடி நிதி உதவி வழங்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் திண்டிவனம், மரக்காணம் - விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் 16.78 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க கடல் நீரில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டமும், சிவகங்கை மாவட்டத்தில் 10 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள குடிநீர் திட்டத்திற்கு ரூ.1,800 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் திட்டங்களுக்கு மட்டுமில்லாமல் மழைநீர் சேமிப்புத் திட்டத்திற்காகவும் மத்திய நிதி உதவியை கோரி அவர் கடிதமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து